பொதுப் பங்கு வெளியீடு: நிறுவனங்கள் திரட்டிய முதலீடு ரூ.14,461 கோடி
சென்ற நிதி ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.14,461 கோடி முதலீட்டைத் திரட்டின. இதுகுறித்து பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரணவ் ஹால்தியா கூறியதாவது:
பொதுப் பங்கு வெளியீட்டின் வாயிலாக கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் தான் நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.33,098 கோடியைத் திரட்டின. அதன் பிறகு சந்தை நிலவரங்கள் சாதகமாக இல்லாத காரணங்களால் இவ்வகை வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை மந்த நிலையைக் கண்டது. அதன்படி நிறுவனங்கள், 2011-12-இல் ரூ.5,893 கோடியும், 2012-13-இல் ரூ.6,497 கோடியும், 2013-14-இல் ரூ.1,205 கோடியும் திரட்டின.
கடந்த நான்கு ஆண்டு கால மந்த நிலைக்கு பிறகு சென்ற நிதி ஆண்டில்தான் நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் அதிகபட்ச நிலையாக ரூ.14,461 கோடியைத் திரட்டியுள்ளன. இதையடுத்து, நடப்பு நிதி ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள 25 நிறுவனங்கள் ஏற்கெனவே செபியின் அனுமதியை பெற்றுவிட்டன. இதன் மூலம், அந்நிறுவனங்கள் ரூ.12,500 கோடி முதலீட்டை திரட்டவுள்ளன. இவை தவிர, மேலும் 6 நிறுவனங்கள் ரூ.3,000 கோடியைத் திரட்டும் வகையில் செபியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன என்று பிரணவ் ஹால்தியா கூறினார்.