தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தேக்கத்துக்கு சிமென்ட் விலை காரணமா?
ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருக்கிறது; தமிழகம் முழுக்க கட்டி முடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் வாங்க ஆளில்லாமல் கிடக்கின்றன என்று செய்திகள் தினமும் வெளிவந்தபடி இருந்தாலும், சிமென்ட் விலை மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஏன்?
ரியல் எஸ்டேட் துறைக்கு மிக முக்கியமானது சிமென்ட். சிமென்ட் இல்லாமல் நம்மால் ஒரு கட்டடத்தையும் கட்ட முடியாது. வழக்கமாகவே, ஒரு பொருளுக்கான தேவை இருக்கும்போதுதான் அதன் பற்றாக்குறையின் காரணமாக விலை கணிசமாக ஏறும். ஆனால், தேவையே இல்லாத நிலையிலும் சிமென்ட் விலை மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை விலை அதிகமாக விற்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, சீரான விகிதத்தில் இருந்து வந்த சிமென்ட் விலை தற்போது வரைமுறையில்லாமல் ஏறி வருகிறது. 2007-ம் ஆண்டு வரை சிமென்ட் விலை சுமார் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிறகு படிப்படியாக உயர்ந்து 2011-2012-ல் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.260 ஆனது. இது கடந்த சில ஆண்டுகளில் ரூ.375 ரூபாயை தாண்டியது. தற்போது ஒரு மூட்டை ரூ.400-க்கும் மேல் விற்பனையாகிறது.
தற்போது வெளிமாநிலங்களில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.260 – 280 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதே தரம் மற்றும் அளவுள்ள சிமென்ட் தமிழகத்தில் ரூ.400-க்கும் மேல் விற்கப்படுகிறது. (பார்க்க கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் வாங்கப்பட்ட சிமென்ட் மூட்டைகளின் பில் ரசீது) தமிழகத்தில் சிமென்ட் விலை அளவுக்கதிகமாக வைத்து விற்கப்படுவதால் கட்டுமானப்பணிகள் பயங்கரமாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் கட்டுமான மதிப்பீடு சுமார் 20% வரை உயர்ந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் துறையில் தேவை குறைந்துள்ள நிலையிலும் சிமென்ட் விலை இப்படி தாறுமாறாக ஏறுவது ஏன், அதுவும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஏன் சிமென்ட் விலை இவ்வளவு வித்தியாசத்தில் விற்கப்படுகிறது என கர்நாடகாவிலும் தமிழகத்திலும் கட்டட வேலைகளைத் தொடர்ந்து செய்துவரும் ஒரு கான்ட்ராக்டரிடம் கேட்டோம்.
‘‘சிமென்ட் விலை தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக இருக்கக் காரணம் சிமென்ட் நிறுவனங்கள்தான். சிமென்ட் விலையை இவர்கள் இவ்வளவு அதிகமாக விற்க, உற்பத்தி செலவையும், மூலப்பொருட்களின் விலையையும் காரணம் காட்டினால், அது ஏமாற்று வேலை. மற்ற மாநிலங் களுக்கும் தமிழகத்துக்கும் உற்பத்திச் செலவானது ஏறக்குறைய ஒன்றுதான். மற்ற மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சிமென்ட்டை நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி இங்கு வந்து குறைவான விலைக்கு விற்கின்றன. அங்கிருந்து ஒரு மூட்டை சிமென்டை கொண்டுவர 100 ரூபாய் வாடகை என 330 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படும் சிமென்ட் ரூ.400-க்கும் மேல் விற்கப்படுகிறது.
சிமென்ட்டினை இவ்வளவு அதிக விலை வைத்து விற்பதால், பில்டர்களுக்கு நஷ்டம் வரப் போவதில்லை. அவர்கள் அதற்கேற்ப வீடுகளில் விலை ஏற்றிவிடுவார்கள். ஆனால், அப்பாவி மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பல ஆண்டு காலமாக குருவிபோல பணம் சேர்த்து, கனவு வீட்டைக் கட்டும்போது, சிமென்ட் கம்பெனிகள் தங்கள் பங்குக்கு கொள்ளை அடிக்க நினைப்பது என்ன நியாயம்?’’ என்று ஆதங்கப்பட்டார் அவர்.
ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தியும் விலையும்!
ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்ய ஆகும் செலவு குறித்தும், சிமென்ட் விலை குறித்தும் பில்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினரும், இன்ஜினீயருமான சகாயராஜிடம் பேசினோம்.
‘‘இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 36 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் தான் பெருமளவு சிமென்ட் உற்பத்தியாகிறது. சிமென்ட் தொழில் மிகவும் லாபகரமானது. சிமென்ட்டுக்கான மூலப்பொருட்களில் ஒன்றான நிலக்கரி சாம்பல், சிமென்ட்டில் 35 சதவிகித அளவுக்கு கலக்கப்படுகிறது. அந்தச் சாம்பலை மிகக் குறைந்த விலைக்கு அனல் மின் நிலையங்களில் இருந்து சிமென்ட் நிறுவனங்கள் வாங்குகின்றன. ஒரு டன் நிலக்கரி சாம்பலில் மூன்று மடங்குக்கும் அதிகமான லாபத்தை ஈட்டுகிறார்கள்.
பிரபல சிமென்ட் நிறுவனத்தின் கணக்கீடுபடி பார்த்தால், 800 – 1000 சதுர அடி அளவுள்ள ஒரு அடுக்குள்ள வீட்டின் கட்டுமானத்துக்கு ஆகும் செலவு சதுர அடிக்கு ரூ.350 – 450. இதில் சிமென்ட்டுக்கான செலவு சதுர அடிக்கு ரூ.70 (20 கிலோ). மொத்த பட்ஜெட் ரூ.3 – 4 லட்சம் எனில், சிமென்ட்டுக்கான செலவு ரூ.70-80 ஆயிரம் (300-350 மூட்டைகள்) தான் ஆகும். ஆனால், தமிழகத்தில் விற்கும் சிமென்ட் விலைக்கு ரூ.1,20,000 செலவு செய்ய வேண்டியிருக்கிறது. கட்டுமானத்தில் பயன்படும் பொருட்களில் சிமென்ட்டுக்கு ஆகும் செலவுதான் அதிகம்.
இப்போது ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செலவைப் பார்ப்போம். சிமென்ட் ஒரு மூட்டை உற்பத்தி செய்ய ஆகும் செலவு என்று பார்த்தால், மூலப்பொருள்கள், கட்டமைப்பின் செலவு, மின்சாரம் உட்பட ரூ.105 ஆகும். மேலும், இதற்கு கலால் வரி 12.36% எனில் ரூ.12.98 (ரூ.117.98), மதிப்பு கூட்டு வரி (vat) 14.5% என ரூ.16.96 (ரூ.134.99) ஆகும். இதில் Vat input credit minimum 50% ரூ.8.48 கழித்தால் ரூ.126.48ஆகும். இதிலிருந்து லாபம் மற்றும் நிர்வாகச் செலவு 25% ரூ.31.62 (ரூ.158.08), போக்குவரத்து ரூ.40 மற்றும் டீலர் கமிஷன் ரூ.15 சேர்த்தால் மூட்டை ஒன்றுக்கு ரூ.213-தான் செலவாகும்.
ஆனால், ஒரு மூட்டை சிமென்ட் ரூ.400-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசின் டான்செம் சிமென்ட் விலை குறைவாக (ரூ.245 – ரூ.285 வரை மூன்று வகை விலைகளில் கிடைக்கிறது) இருந்தாலும், அது போதுமான அளவுக்கு எல்லாக் கடைகளிலும் கிடைப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி பல பெரிய தனியார் நிறுவனங்கள் விலையை அதிகமாக வைத்து விற்பனை செய்கிறது.
எனவே, விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், செயற்கையாக விலையை உயர்த்தாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்” என்றார்.
தமிழகத்தில் சிமென்ட் விலை தொடர்ந்து அதிகமாக இருக்க என்ன காரணம், தென் இந்தியாவின் பிற மாநிலங்களில் சிமென்ட் விலை குறைவாக வைத்து விற்கும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது, ஒரு மூட்டை சிமென்ட்டுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை அதிகம் வைத்து விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன என்று விவரமறிந்தவர்களிடம் கேட்டோம். அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
யூனியனும் லாபியும்!
சிமென்ட்டின் விலை கொஞ்சம்கூட குறையாமல் இருப்பதற்கு காரணம் சிமென்ட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயல்படுவதுதான் என அந்தத் துறை பற்றி நன்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். முன்பு போல இல்லாமல், சிமென்ட் துறையானது இப்போது மையப்படுத்தப்பட்ட துறையாக இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது, எந்தெந்த காலத்தில் இந்த டிமாண்ட் அதிகமாகவும், குறைவாகவும் இருக்கிறது என்கிற புள்ளிவிவரங்களை சிமென்ட் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் விரல்நுனியில் வைத்திருக் கின்றன. டிமான்ட் குறையும்பட்சத்தில் இந்த நிறுவனங்கள் உற்பத்தியையும் குறைத்துவிடுவதால், சந்தையில் சிமென்ட் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். இதனால் சிமென்ட்டுக்கான டிமாண்ட் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதால், விலை குறையாமலே வைத்திருக்கின்றன சிமென்ட் நிறுவனங்கள். இதன் மூலம் 100 முதல் 200% வரை சிமென்ட் நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகிறது. டிமாண்ட் ஓரளவுக்குக் குறைந்தாலும் உற் பத்தியைக் குறைக்காமல் இருந்தால், சிமென்ட் விலையானது நிச்சயம் குறையும்.
தவிர, வட மாநிலங்களில் சிறிய அளவில் செயல்படும் சிமென்ட் நிறுவனங்கள் அதிகம். ஆனால், நம் மாநிலத்திலோ பெரிய சிமென்ட் நிறுவனங்கள் சிறிய அளவில் செயல்படும் நிறுவனங்களை வளரவே விடுவதில்லை. சிமென்ட் விலை குறையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
மாநிலங்களுக்கிடையே ஏன் விலை வித்தியாசம்?
சிமென்ட் தயாரிப்புக்குத் தேவையான சுண்ணாம்புக்கல், ஜிப்சம், களிமண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் தாராளமாகவே கிடைக்கிறது. எனவே, தமிழகத்திலேயே சிமென்ட்டை உற்பத்தி செய்து, அதை தமிழகத்திலேயே விற்கலாமே! இங்கு தயாராகும் சிமென்ட்டை ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் அனுப்புகிறார்கள்; அந்த மாநிலங்களில் தயாராகும் சிமென்ட்களை அங்கிருந்து இங்கு கொண்டு வந்து விற்கிறார்கள். இந்த மாநிலத்தில் தயாராகும் சிமென்ட்டை இங்கேயும் மற்ற மாநிலங்களில் தயாராகும் சிமென்ட்டை அந்தந்த மாநிலங்களிலும் விற்பனை செய்தால், தேவை இல்லாமல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லையே!
மேலும், சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை 120-130தான் எல்லோருக்கும் ஒரே மாதிரியான டெஸ்டிங்கில் ஐஎஸ்ஐ தரச் சான்று வழங்கப்படும்போது, தமிழகத்தில் தயாரிக்கப்படும் சிமென்ட் மட்டும் உசத்தி என்று விலையை ஏற்றி விற்க எப்படி முடியும்?
அஞ்சும் டீலர்கள்!
சிமென்டை வாங்கி விற்கும் டீலர்கள் பெரிய சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களை பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. டீலர்கள் ஒரே ஒரு பிராண்ட் சிமென்டை மட்டும் வைத்து விற்க முடியாது. மக்களுக்கு அவர்களுடைய தேவை மற்றும் திறனுக்கேற்ப தேர்வு செய்யும் வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்பதற்காக பல பிராண்டு மற்றும் விலையிலான சிமென்ட்களை டீலர்கள் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அவர்களும் சிமென்ட் நிறுவனங்களை பகைத்துக்கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுகின்றனர்.
ரியல் எஸ்டேட் தேக்கத்துக்கு சிமென்ட் விலை காரணமா?
இந்தியாவின் மொத்த ஜிடிபியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்கு 9%. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்ததாக வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறை என்றால் அது ரியல் எஸ்டேட் துறை. இந்தத் துறை தேக்கமடைந்தால், அது கோடிக் கணக்கான மக்களை நேரடியாகப் பாதிக்கும்.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 17,296 ரியல் எஸ்டேட் திட்டங்கள் அரசாங்கத்தினாலோ அல்லது தனி நபர்களாலோ நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் தாமதிக்கப்பட்டு நிறைவேறாமல் கிடக்கின்றன என்று அரசின் ஆய்வுக் கணக்கு சொல்கிறது. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் தேவை இல்லாத பண முடக்கம் அதிகரித்து உள்ளதாகவும் சொல்கிறது.
ரியல் எஸ்டேட் துறை தற்போது தேக்கமடைய என்ன காரணம், சிமென்டின் இந்த விலை உயர்வு ரியல் எஸ்டேட் தேக்கத்துக்குக் காரணமா? என்று ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணி சங்கரிடம் கேட்டோம்.
‘‘ரியல் எஸ்டேட் தற்போது தேக்கத்தில் இருக்க நிச்சயம் சிமென்ட்டும் ஒரு காரணம்தான். ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. சிமென்ட், மணல் போன்றவை ரியல் எஸ்டேட் தேக்கத்துக்கு காரணங்களாக இருந்தாலும், முக்கியமான காரணம் அதற்குள் ஒளிந்திருக்கும் பணப் பதுக்கல்தான். அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில் பதுக்குவது சாதாரணமாக நிகழ்கிறது.
பழைய மகாபலிபுரம் சாலையில் மட்டும் தற்போது 50,000-க்கும் அதிகமான ஃப்ளாட்டுகள் கட்டப்பட்டு விற்காமல் அப்படியே இருக்கின்றன. ஆனாலும் வீடுகளின் விலையைக் குறைக்க யாரும் தயாராக இல்லை. வீடுகளின் விலை உயர்வால் மக்கள் யாரும் வாங்க முன்வருவதில்லை. ஏனெனில், மக்களிடம் ரூ.30 லட்சம் 40 லட்சம் கொடுத்து வீடு வாங்கும் அளவுக்குப் பணமில்லை. துறை சார்ந்த பொருளாதாரங்கள் உயர்ந்து இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மக்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. அதனால் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறார்கள். ஆனால், யாரும் வீடுகளை வாங்க முன்வராத நிலையிலும் தொடர்ந்து பல மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ரியல் எஸ்டேட் தேக்கத்தில் இருப்பது போன்ற ஒருநிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. தேவையை மீறிய சப்ளையினால்தான் இந்தத் தேக்கம்.
ரியல் எஸ்டேட்டில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை நிர்ணயமும், பதிவுத் துறை சட்ட நடைமுறைகளும் இல்லாததால், முறைகேடுகள் அதிகம் நடக்கிறது. தமிழக ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, எதுவுமே சரியாக இல்லை. வெளிமாநிலங்களில் மூலப்பொருட்களின் விலையும், எஃப்எஸ்ஐ (Floor Space Index) மற்றும் பதிவு நடைமுறைகளும் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறை முழுவதும் லாபி செய்யப்படுகிறது. மேலும், அரசின் கைடுலைன் மதிப்பும் தெளிவில்லாமல் நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் சட்டமும் நுகர்வோருக்குப் பயனுள்ள வகையில் இயற்றப்பட்டிருந்தாலும், அந்தப் பலனை அவர்கள் அடையும் வகையில் சில நடைமுறைகளை நெறிப்படுத்தாததால் அந்த நோக்கமும் நிறைவேறாமல் போகும் நிலையே உள்ளது” என்றார்.
சிமென்ட் நிறுவனங்கள் சொல்வதென்ன?
சிமென்ட் விலை குறையாமல் தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கும் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் சிமென்ட் விலை அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணம் என தமிழகத்தில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களிடம் கேட்டோம்.
‘‘இது தேர்தல் நேரம். சிமென்ட் விலை பற்றி இப்போது பேசினால் எங்களுக்கு தேவையில்லாத தர்மசங்கடம் வருமே!’’ என்று பேசத் தயங்கினர். தங்கள் நிறுவனங்களின் சார்பாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் அவர்கள் நமக்கு ‘ஆஃப் த ரெக்கார்ட்’ அளித்த பதில் இதோ…
‘‘சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களான நாங்கள் வேண்டுமென்றே அதிக விலை வைத்து விற்பதாகவும் நாங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. எங்களுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. கடந்த 2007-ம் ஆண்டிலேயே வெளிநாடுகளிலிருந்து சுங்க வரி எதுவும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிமென்ட் தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களான சுண்ணாம்புக்கல், ஜிப்சம், நிலக்கரி, கோக் நிலக்கரி போன்றவற்றை இறக்குமதி செய்ய அதிக சுங்க வரி கட்ட வேண்டியிருக்கிறது.
தவிர, உள்நாட்டிலும் மிக அதிகமாக வரி விதிக்கப்படும் துறைகளில் சிமென்ட் துறை முன்னணியில் இருக்கிறது. ஆடம்பரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியைவிட மிக அதிகமாக சிமென்ட்டுக்கு வரி விதிக்கின்றன அரசாங்கங்கள். தொழிற்சாலையிலிருந்து வெளிவருவதற்குமுன் சுமார் 60% வரை விதிக்கிறார்கள். இதனை 20 முதல் 25 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.
இப்படி நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு இவ்வளவு வரி கட்டினால், எங்களால் சிமென்ட்டின் விலையை எப்படிக் குறைக்க முடியும்?
தவிர, எல்லா பிராண்ட் சிமென்டுகளின் விலையும் ரூ.400-க்கு மேல் விற்பதாகச் சொல்கிறார்கள். இது தவறு. ஒரு சிமென்ட் கடைக்குப் போய் பாருங்கள். ரூ.250-லிருந்து ரூ.400 வரை பல விலைகளில் சிமென்ட் கிடைக்கிறது. அவரவர் தங்கள் வசதிக்கேற்ப சிமென்ட் வாங்கி பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். நல்ல, தரமான சிமென்ட் வேண்டும் என்பவர்கள் ரூ.400-க்கு விற்கும் சிமென்ட்டை வாங்கிச் செல்கிறார்கள்.
மேலும், கடந்த காலங்களில் பிற பொருட்களின் விலை உயர்ந்த அளவுக்கு சிமென்ட்டின் விலை உயரவில்லை. 1984 – 85-ல் ரூ.100-க்கு விற்ற சிமென்ட் மூட்டை இன்று அதிக பட்சமாக ரூ.400-க்கு விற்பனை ஆகிறது. இது நான்கு மடங்குதான் அதிகம். ஆனால், எலெக்ட்ரானிக் பொருட்களும் வேறு சில பொருட்களும் 12 மடங்கு அதிகரித்துள்ளது. அவற்றுடன் ஒப்பிடும்போது இது குறைவுதானே!
வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் இரும்பின் விலை குறையவில்லை. மணல் விலை குறைய வில்லை. ஆனால், ஒரு கிலோ வெறும் 8 ரூபாய்க்கு விற்கப்படும் சிமென்ட்டின் விலையை மட்டும் குறைக்கச் சொல்வது எப்படி? 8 ரூபாய்க்கு ஒரு கிலோ கத்திரிக்காய்கூட கிடைக்காதே!’’ என்றெல் லாம் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், பிற மாநிலங்களைவிட நம் மாநிலத்தில் சிமென்ட் விலை அதிகமாக விற்கப்படுவதற்கான காரணத்தை மட்டும் சொல்ல முடியவில்லை.
அரசின் கடைக்கண்!
குறைந்த விலையில் சிமென்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ‘அம்மா சிமென்ட்’ என்கிற பெயரில் அரசாங்கமே சிமென்ட்டினை விற்கத் தொடங்கியது. ஆனால், எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கிற அளவுக்கு இந்த சிமென்ட் விற்கப்படவில்லை. இதனால் சிமென்ட் டிமான்ட் பெரிய அளவில் குறைய வில்லை.
சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களைக் கட்டுப் படுத்தாமல், அரசாங்கமே சிமென்ட் விற்றால் அதன் விலை குறைந்துவிடுமா என்ன? இனியாவது சிமென்ட் விலை குறைவாகக் கிடைப்பதற்கான வழிவகைகளை நமது மாநில அரசாங்கம் தீவிரமாக செய்ய வேண்டும். அப்போது தான் சிமென்ட் விலை குறைந்து ஏழைகளாலும் வீடு கட்ட முடியும். அரசாங்கமும் உள்கட்டமைப்புத் திட்டங்களை இன்னும் அதிகம் செயல்படுத்த முடியும்!