ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர்களை விடுவிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25ஆண்டுகளுக்கும் அதிகமாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகள் இடைவெளியில், தமிழக அரசின் முடிவை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது. இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது ஆனால் இந்த கடிதத்திற்கு பதிலளிகாமல் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 25.04.2014 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விடை காண வேண்டிய சட்டரீதியான 7 கேள்விகளை முன்வைத்தது. அதன் பிறகு 02.12.2015 அன்று இந்த கேள்விகளுக்கு விடையளித்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு பற்றி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை வழக்கு விசாரணைக்கே வராமல் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்றவாளிகள் 7 பேரும் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதி கேட்டு மீண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு மார்ச்.2-ஆம் தேதி கடிதம் எழுதியது.
மார்ச் 5-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இது அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசு எடுத்த முடிவு என விமர்சிக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை செயலர், தமிழக உள்துறை செயலர் ஞானதேசிகனுக்கு அனுப்பியுள்ள கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதம் குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டது. இதனடிப்படையில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அந்த கடிதத்தை நிராகரித்த நிலையில், கடந்த மாதம் 2-ஆம் தேதி திடீரென மீண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த கடிதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் 7 பேரும் விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.