இனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்

இனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்

colaபாட்டிலை ஓப்பன் செய்யும்போது நுரைத்துக் கிளம்பும் பானத்தைப் பார்க்கும்போதே ஈர்ப்பு வந்துவிடுகிறது. ‘இந்தியாவின் தேசிய பானம் எது?’ எனக் கேட்டால், `கோலா’ எனச் சொல்லும் அளவுக்குப் பிரபலமாக இருக்கின்றன, கார்பனேட்டட் டிரிங்க்ஸ். முழுக்க முழுக்க செயற்கைச் சுவையூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்திகள், நிறமிகள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து தயாரிக்கப்படும் இந்த பானங்கள்தான், இளைய தலைமுறையினருக்குத் தங்களை ஸ்டைலாக, ட்ரெண்டியாகக் காட்டிக்கொள்ளும் அடையாளம்.

எங்காவது, எப்போதாவது இந்தக் குளிர்பானங்களின் ஆரோக்கியம் குறித்த செய்தி ஒன்று திடீரெனப் பரபரப்பாகும். பிறகு, அலை அலையாக வந்துகொண்டிருக்கும் செய்திகளின் வெள்ளத்தில் மீண்டும் இந்தப் பிரச்னை ஆழத்துக்குப் போய்விடும். உண்மையில், குளிர்பானங்கள் எந்த அளவுக்கு நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற விழிப்புஉணர்வு இல்லாமலேயே இருக்கிறோம்.

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்கள் அதீத அழுத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவைத் தண்ணீரில் செலுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இன்று, சந்தையில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்கள் முதல் கிராமங்களில் தயாரிக்கப்படும் பன்னீர் சோடா, ஜிஞ்ஜர் சோடா வரை அனைத்திலும் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இந்த பானங்களில் இனிப்புச் சுவையைச் சேர்ப்பதற்காக, சாக்கரின் சேர்க்கப்படுகிறது. கோலாவில் அளவுக்கு அதிகமான சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் கலோரி அதிகமாகிறது. பெரிய மால்களிலும், ஃபுட் கோர்ட்டுகளிலும், தியேட்டர்களிலும், பன்னாட்டு ரெஸ்டாரன்ட்களிலும் ‘காம்போ ஆஃபர்’ என்ற பெயரில் இது போன்ற பானங்களை வழங்கி, மக்களைப் பழக்கப்படுத்திவிட்டனர். இவற்றில் பெரும்பாலான பானங்கள் `அடிக்டிவ்னெஸ்’ எனப்படும் அடிமைப்படுத்தும் தன்மை உடையவை. ஒரு முறை குடித்த பின் மீண்டும் மீண்டும் குடிக்கத் தூண்டுபவை.

எனர்ஜி டிரிங்க்

குளுகோஸ் பவுடர்களைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தால், அதிக எனர்ஜி கிடைப்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்திருப்போம். இந்த பவுடர்களில் இருப்பது, ஃப்ரக்டோஸ். இது தேன், பழங்களில் இயற்கையாக உள்ள ஓர் இனிப்பான மூலப்பொருள். இது, ரத்தத்தில் குறைவான அளவிலேயே சர்க்கரையைச் சேர்ப்பதால், கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. ஆனால், இன்று பல குளிர்பானங்களில் `கிரிஸ்டலைன் ஃப்ரக்டோஸ்’ எனப்படும் செயற்கை ஃப்ரக்டோஸ் சேர்க்கப்படுகிறது. இது, அமிலத்தன்மை உடையது. கல்லீரலைப் பாதிப்பதுடன், ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உடல்பருமன், தோல் சுருக்கம், இதய நோய்கள், உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

உடல்பருமன்

கார்பனேட்டட் பானங்களினால் வரும் முக்கியமான ஆபத்து, உடல்பருமன். பசி எடுக்கும்போது இந்த பானங்களைப் பருகுவது மிகவும் தவறான பழக்கம். இதனால், வயிற்றின் அமிலத்தன்மை அதிகமாகிறது.

சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்புசமாக உள்ளது என, ஜீரணத்துக்காக சோடா குடிப்பவர்கள் பலர். சோடாவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் சர்க்கரை, கணையத்தைத் தேவைக்கு அதிகமான இன்சுலினை சுரக்கவைக்கும். அது வயிற்றில் உள்ள சர்க்கரையை உடைக்க, வேகமாகச் செயல்பட்டு, சாப்பாட்டை உடனே ஜீரணித்துவிடும். உடலுக்குத் தேவையான கலோரிகளை எடுத்துக்
கொண்டு மீதத்தைத் தோலுக்கு அடியில் கொழுப்பாக மாற்றிச் சேர்த்துவைக்கும். அதிகமாகச் சுரந்த இன்சுலின் சாப்பிட்ட மூன்று மணி நேரத்தில் மீண்டும் பசியைத் தூண்டும். இவ்வாறு, உடல் பருமனான பிறகும் அடிக்கடி சோடா குடிப்பதால், மீண்டும் மீண்டும் பசி உணர்வு தூண்டப்படும். உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்துகொண்டே இருக்கும்.சோடாவில் உள்ள சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், சோடியம் மற்றும் காஃபைன் போன்றவை, குடித்த சில நிமிடங்களில் நாவறட்சியை ஏற்படுத்தும். உடலின் சராசரி நீர் அளவை வற்றவைக்கும்.

மதுவில் கலக்கப்படும் குளிர்பானங்கள்

மதுவின் கசப்பு தெரியாமல் இருக்க, குளிர்பானம் கலந்து குடிக்கும் வழக்கம் நம் ஊரில் உள்ளது. ஆல்கஹால் கார்பன் டை ஆக்சைடுடன் சேரும்போது, பல ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலை நாட்டினர் இப்படிப் பருகுவது இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பல குளிர்பான நிறுவனங்கள், இந்தியர்களின் மதுப்பழக்கத்தை நம்பியே இந்தியாவில் கடை விரித்திருக்கின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.

பற்களில் பாதிப்பு

பற்களின் வெளிப்புற பகுதியான டென்டைன் மற்றும் எனாமல் நமது எலுப்பைவிடக் கடினமானது. கடினமான உணவையும் மெல்ல, அரைக்க இது உதவுகிறது. தொடர்ந்து கோலா பருகும்போது, எனாமல் அரிக்கப்படுவதால் பற்கூச்சம் மற்றும் பற்சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எப்போதாவது ஒரு முறை கார்பனேட்டட் பானங்களையும் கோலாவையும் அருந்துவது தவறு இல்லை. ஆனால், அதை ஃபேஷன் என்றும், ட்ரெண்ட் என்றும் போலியாக நம்பி, தொடர்ச்சியாக அருந்தி, நோயை விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல.

Leave a Reply