தீருமா வீட்டுப் பற்றாக்குறை?
மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று; உண்ண உணவு, உடுத்த உடை, வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க ஓர் உறைவிடம். இந்த அடிப்படைத் தேவைகளில் உண்ண உணவும் உடுத்த உடையும் ஓரளவுக்கு கிடைக்கக்கூடியவைதான். ஆனால் வெயிலிலும் மழையிலும் நம்மைப் பாதுகாக்கும் உறைவிடத் தேவைதான் நிறைவேறாக் கனவாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் வீடற்றவர்களின் எண்ணிக்கை 1.77 மில்லியன் ஆகும். இந்தியாவின் நிலவும் வீட்டுப் பற்றாக்குறை 18.78 மில்லியன் ஆகும். இந்த வீட்டுப் பற்றாக்குறையின் போக்கும் விதமாகப் பலவிதமான திட்டங்களை மத்திய அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான், பிரதான் மந்திரி அவாஸ் யோஜ்னா-கிராமின் திட்டம்.
இதுபோன்ற ஏழைகளுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டம், இது தற்போது பிரதான் மந்திரி அவாஸ் யோஜ்னா-கிராமின் என்னும் பெயரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகள் இல்லாமல் உள்ளனர். அவர்களில் 2 கோடி பேர் நகரங்களிலும், 3 கோடி பேர் கிராமங்களிலும் உள்ளனர்” என்று ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதின் அவசியம் குறித்து, பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜ்னா-கிராமின் திட்டம் ஏப்ரல் 1 அன்று தொடங்கி, எதிர்வரும் மார்ச் 2018-19 வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்தச் செயல் திட்டத்தில் ஏற்கெனவே வீட்டுத் திட்டத்தில் சமையல் அறைக்கு ஒதுக்கிய அளவைவிடக் கூடுதலாக ஒதுக்கத் திட்டமிட்டுள்ளனர். அதாவது இதற்கு முன் 20 சதுர மீட்டர் இருந்ததை 25 சதுர மீட்டராக மாற்றியிருக்கின்றனர்.
சமமான நிலப்பகுதியில் வீடு கட்டுவதைவிட மலைப்பாங்கான பகுதியில் வீடுகளைக் கட்டுவது கடினம். இந்தச் சிரமத்தைக் கருத்தில்கொண்டே, சமமான நிலப்பகுதியில் வீடு கட்டுவதற்கு முன்பிருந்த இந்திரா யோஜ்னா திட்டத்தில் ரூபாய் 70 ஆயிரம் என்றும் மலைப்பாங்கான பகுதியில் வீடு கட்டுவதற்கு ரூபாய் 75 ஆயிரம் என இருந்தது. ஆனால் தற்போதைய பிரதான் மந்திரி அவாஸ் யோஜ்னா திட்டத்தில் இந்தத் தொகை முறையே 1.2 லட்சம் ரூபாய் ஆகவும் 1.3 லட்சம் ரூபாய் ஆகவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்காகச் செலவிடப்படும் தொகை ரூபாய் 81,975 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு நபார்ட் வங்கியிலிருந்து ரூபாய் 21,975 கோடி கூடுதல் தொகையைப் பெறவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பாக சமூகப் பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பின் மூலம் இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவுசெய்யப்பட இருக்கின்றனர். பயனாளிகளுக்கான வீட்டைக் கட்டுவதில் (சமமான நிலப் பகுதியில்) மத்திய, மாநில அரசின் பங்கு 60:40 ஆகவும், (மலைப்பாங்கான பகுதியில்) 90:10 என்னும் விகிதத்திலும் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தத் திட்டம் நியாயமான முறையில் செயல்படுத்தப்படும் விதத்தில் இந்தியாவின் வீட்டுப் பற்றாக்குறை விரைவில் தீரும் எனச் சொல்லலாம்.