மனித நேய மக்கள் கட்சியின் தொகுதியை அதிமுக மாற்றியது ஏன்?
சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இதுவரை தனது கட்சியின் வேட்பாளர்களை ஏழு முறை மாற்றிவிட்டார். இந்நிலையில் கூட்டணி கட்சிக்கு கொடுத்த தொகுதியை மாற்றுள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப் பதிலாக வேலூர் தொகுதி மாற்றப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டதன்பேரில்தான் இந்த மாற்றம் நடைபெற்றதாகவும், அதிமுக தலைமை தன்னிச்சையாக இந்த மாற்றத்தை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாகப்பட்டினம் மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுகவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி வேலூர் தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே ஒட்டன்சத்திரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹாரூன் ரசீத், வேலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். இந்த நிலையில், அதிமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் கிட்டுசாமி போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.