எனது பதவிக்காலம் முடிவதற்குள் ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்த முடியாது. ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் சிரியா பிரச்சனை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை அகற்ற அமெரிக்கா படையை அனுப்பாது என்று உறுதிபட கூறியுள்ளார்.
ஒபாமா மேலும் கூறியதாவது: “சிரியாவில் பஷார் அல் ஆசாத் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு அமெரிக்கா தரைப்படையை அனுப்பாது. அப்படி அமெரிக்காவோ, இங்கிலாந்தோ தரைப்படைகளை அனுப்பினால், அது தவறு ஆகும். இன்னும் 9 மாதங்களே நான் பதவியில் உள்ள நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்தி விட முடியும் என்று கருதவில்லை” என்று கூறினார்
சிரியாவில் நிலைமை மிகவும் குழப்பமாக உள்ளது. பதற வைக்கிற வகையில் அது அமைந்துள்ளது. அங்குள்ள பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டு விட முடியாது. அங்கு நீண்ட காலமாக நிலவி வருகிற பிரச்சினைக்கு, ராணுவம் மூலம் தீர்வு கண்டு விட முடியாது. அதே நேரத்தில் அங்கு ராக்கா போன்ற இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
ரஷியா, ஈரான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சர்வதேச சமூகம் நிர்ப்பந்தம் செய்து, பேச்சு நடத்தி தீர்வு காண வைக்க வேண்டும். ஆனால் அது சிரமமானது.
இவ்வாறு ஒபாமா கூறினார்.