தேவை, கட்டுமானக் கழிவு மேலாண்மை
கட்டுமானத் துறையில் சுற்றுச்சூழல் மாசுபாடு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் கட்டிடக் கழிவு மேலாண்மைக்காகவும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் முதல் முறையாக கட்டுமானம் மற்றும் கட்டிட இடிபாட்டுக்கழிவு நிர்வாக விதிகளை இந்த ஆண்டு அறிவித்துள்ளது.
தற்போது இந்தியா முழுக்க 530 மில்லியன் டன்கள் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன. சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் புதிய விதிகளின் கீழ் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும் மறுபயன்பாட்டுக்கும் உள்ளாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கட்டிடக் கழிவு மேலாண்மையைப் பொருத்தவரை, தற்போதைய நகராட்சி கழிவு மேலாண்மை விதிகளே கடைபிடிக்கப்பட்டு வந்தன.
புதிதாக உருவாகிவரும் புறநகர் கட்டுமானப் பகுதிகளிலிருந்து உருவாகும் கட்டிடக்கழிவுகள்தான் அதிகபட்சமாக முறையின்றி வெளியேற்றப்படுபவை. ஏரிகள், திறந்தவெளிப்பகுதிகள், பள்ளங்களில் அவை கொட்டப்படுகின்றன. ஆனால் சிறந்த கட்டிடக்கழிவு மேலாண்மை என்பது படிப்படியாகச் செய்யப்பட வேண்டியது. கட்டிடக் கழிவுகளை ஒரு இடத்தில் சேமிப்பது, தரம் பிரிக்குமிடத்திற்கு அனுப்புவது, பிரிப்பது மற்றும் கழிப்பது என்பதே சரியான கட்டிடக்கழிவு மேலாண்மை.
புதிய கட்டுமானம் மற்றும் கட்டிட இடிபாட்டுக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில், கட்டுமானக் கழிவுகளுக்குப் பொறுப்பான கட்டுநர் ஒவ்வொருவரும் கட்டிடக்கழிவுகளை பிரித்து, சேகரிப்பு மையங்களில் சேர்க்க வேண்டியது அவசியம். முதலில் இதுபோன்ற விதிகள் கட்டிடம் கட்டுபவருக்குச் சிரமமாகத் தெரிந்தாலும் நீண்டகால நலன்களின் அடிப்படையில் லாபகரமானதே. சிறப்பான முறையில் கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்தால் 20 சதவீதம் கட்டுமானச் செலவை மிச்சம் பிடிக்கலாம்.
கட்டிடக் கழிவுகளுக்குப் பணம் கட்ட வேண்டும்
சாலைகள், பாலங்கள், சாலை மேம்பாலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பெரிய கட்டுமானங்களில் ஈடுபடுபவர்கள் நாள்தோறும் 20 டன் கழிவுகளை உருவாக்குகின்றனர். ஒரு கட்டுமானத் திட்டத்தில் 300 டன் கட்டிடக்கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கட்டிடக் கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்வதற்காகச் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கட்டுநர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் முடிவுசெய்துள்ளது. ஆனால் சிறிய கட்டுமான நிறுவனங்களை எப்படிக் கட்டிடக் கழிவு மேலாண்மைக்குப் பொறுப்பாக்குவது என்பது பற்றி விதிமுறைகள் எதுவும் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள்
சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டிடக் கழிவுகளைத் தரம்பிரிப்பதற்கும் கழிப்பதற்குமான வசதிகள் இருப்பின் கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுமானப் பொருட்களாகக் குறைந்த செலவில் பயன்படுத்த இயலும். அத்துடன் நகரத்தில் உள்ள நீர்நிலைகள், பள்ளங்களில் போய் சேர்ந்து மாசுபடாமலும் தடுக்க முடியும். கட்டுமானக் கழிவுகளை நொறுக்கி, சுத்தம் செய்து ரெடிமிக்ஸ் கான்கிரீட், கெர்ப் ஸ்டோன்ஸ், சிமெண்ட் செங்கல்கள், வழித்தடக் கற்கள், ஹாலோ பிரிக்ஸ் மற்றும் மேனுபேக்சர்ட் மணலாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ள விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுவதற்கு, சரியான நிதியையும் மனித வளங்களையும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஒதுக்க வேண்டும். அத்துடன் கட்டிடக் கழிவு மேலாண்மைத் திறன்கள் மற்றும் மறுசுழற்சி உட்கட்டமைப்பு வசதிகளும் நகரங்களில் உருவாக்கப்பட வேண்டும்.