விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி கடத்தலா? கைதா? இலங்கையில் பரபரப்பு
இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தின் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர் திடீரென இலங்கை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை உறுதி செய்துள்ளது.
திரிகோணமலை மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ராம், பின்னர் ராணுவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பெற்று நான்கு வருடங்கள் கழித்து அதாவது 2013ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று ராம் திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால் அவர் கடத்தப்படவில்லை என்றும் அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனாலும் ராமின் மனைவி காவல்துறையினர் கூறியதை நம்பவில்லை. நீல நிற ஜீப் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அவரைக் கடத்திச் சென்றதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இந்த புகாரை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.