இந்தியாவின் சாதனை மகள்!
இந்தியாவின் சமீபத்திய அடையாளம். இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துறைக்கு உயிர் கொடுத்தவர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற சாதனை படைத்தவர். இளைஞர்களின் ரோல்மாடல் 22 வயது தீபா கர்மாகர்!
யார் இந்த தீபா?
இயற்கை எழில் மிக்க வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று திரிபுரா. ஏழ்மையான மாநிலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தீபா. அவரது அப்பா துலா கர்மாகர் பளு தூக்கும் வீரர். தன் மகளை விளையாட்டு வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்பது அவரது லட்சியம்.
பிஸ்பேஸ்வர் நந்தி என்ற புகழ்பெற்ற பயிற்சியாளரிடம், 6 வயதில் தீபாவைச் சேர்த்துவிட்டார் துலா. அந்த வயதில் தீபாவுக்கு விளையாட்டு மீது அத்தனை ஆர்வம் இல்லை. பயிற்சியாளர் நந்தி, தீபாவின் கால்கள் தட்டையாக இருப்பதைக் கவனித்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கு வலிமை, வளைந்து கொடுக்கும் தன்மை, சமநிலை மூன்றும் மிக முக்கியம். பாதங்கள் உடலைச் சமநிலைப்படுத்தத் தவறினால், உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. தட்டையான பாதங்களால் உடலைச் சமநிலைப்படுத்த முடியாது. முதலில் கால்களுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார் நந்தி. நீண்ட முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பிறகு, தீபாவின் பாதம் வளைந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளும் ஆரம்பித்தன.
இந்தியாவில் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக்ஸ். 15 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக் கூடத்தில் எலிகளும் கரப்பான்களும் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. ஜிம்னாஸ்டிக்ஸ் கருவிகள் கிடையாது. மரக்கட்டைகளை வால்ட் போலவும், குதிக்கும் இடத்தில் அடிபடாமல் இருப்பதற்கு ஸ்பாஞ்ச் ஷீட்டுகளையும் வைத்திருப்பார்கள். இதில்தான் அந்தச் சின்னஞ்சிறு தீபா தினமும் பயிற்சி எடுத்துவந்தார். அடிக்கடி மழை பொழியும் இடம் என்பதால், பயிற்சிக் கூடத்தில் தண்ணீர் தேங்கிவிடும். தண்ணீர் வடியும் வரை பயிற்சிக்காகக் காத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸுக்கு எதிர்காலம் இல்லை என்ற சூழலில் பயிற்சியாளர் நந்தி, துலால், தீபாவின் அம்மா மூவரும் ஏதோ நம்பிக்கையில் தீபாவை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தனர். அப்பா விளையாட்டு நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார் என்றால், அம்மா அதற்கான மனவலிமையை உண்டாக்கினார். ஒரு கட்டத்தில் தீபாவை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆட்கொண்டுவிட்டது!
வேகம் தந்த வெற்றி ருசி
2007-ம் ஆண்டு. தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிவாகை சூடினார் தீபா. வெற்றியின் ருசி, தீபாவை மேலும் மேலும் உழைக்கத் தூண்டியது. தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றார். பதக்கங்களை அள்ளி வந்தார்.
ஜிம்னாஸ்டிக்ஸில் பல விதமான விளையாட்டுகளையும் கற்றுக்கொண்டார்.
2010-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பாக தீபா கலந்துகொண்டார். அங்கேதான் தீபாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக்கூடிய உத்வேகம் கிடைத்தது. இந்தியாவின் ஆஷிஷ் குமார் முதல் முறை ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்றார். ஓர் ஆண் பதக்கம் பெறும்போது, ஏன் ஒரு பெண்ணாலும் பதக்கம் பெற முடியாது என்று யோசித்தார் தீபா. அப்பொழுதும் கூட ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுகளுக்கான சாதனங்கள் அவ்வளவாக இல்லை.
தன்னுடைய உழைப்பையும் பயிற்சியையும் இன்னும் அதிகமாக்கிக்கொண்டார். அந்தக் கடின உழைப்பு நான்கே ஆண்டுகளில் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்தது. 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் தீபா. இந்தப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய விளையாட்டுத் துறை இரண்டு மாதங்களே பயிற்சி அளித்தது.
சர்வதேச அங்கீகாரம்
2015-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஏஆர்டி ஜிம்னாஸ்டிக்ஸ் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் 77 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் தீபா. இதில் 67 தங்கப் பதக்கங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் படைத்த சாதனைகளுக்குப் பிறகு, ‘திரிபுராவின் தங்க மகள்’ என்று அழைக்கப்பட்ட தீபா, இந்தியாவின் சாதனை மகளாக மாறினார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சுற்றி வளைத்தனர். பாராட்டுகளைத் தெரிவித்தனர். அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஆட்டோகிராஃப் வாங்கினர். பாலிவுட் ஸ்டார் அளவுக்குத் தன்னை மக்கள் கொண்டாடிவருவதில் தீபாவுக்கு அளவற்ற சந்தோஷம்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை யெலினா புராடுநோவா. அவர் அந்ததரத்தில் இரண்டு குட்டிக் கரணங்களைப் போட்டு, நிலத்தில் கால் பதிப்பார். மிக ஆபத்தான விளையாட்டு இது. அவரது பெயரிலேயே ‘புராடுநோவா’ ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற தனிப் பிரிவே உருவாகிவிட்டது. இதுவரை புராடுநோவாவை வெற்றிகரமாக விளையாடி முடித்தவர்கள் யெலினா உட்பட 5 பேர் மட்டுமே. இதில் தீபா அதிகப் புள்ளிகள் பெற்று, முதல் இடத்தில் இருக்கிறார்!
“இந்தியாவில் நிறையப் பேருக்குத் திரிபுரா எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. சச்சின்கூட என்னை மகாராஷ்டிராவில் இருந்து வருகிறாயா என்றுதான் கேட்டார். திரிபுரா மக்கள் என் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் பதக்கம் வாங்கிக் கொடுப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும்! மிகக் குறைவான வசதிகளுடன் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்திருக்கிறது என்றால், அதற்கு என் பயிற்சியாளர் நந்திதான் முக்கியக் காரணம். என் அப்பாவும் ஒரு பயிற்சியாளர் என்பதால் என் குடும்பம் என்னை விளையாட்டில் இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் எளிமையான விளையாட்டு அல்ல. ஒரு சில நிமிடங்களில் முடிந்து போகும் இந்த விளையாட்டுக்கு மிகக் கடினமான பயிற்சி தேவை. கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்” என்கிறார் தீபா.
கல்லூரியில் பொலிட்டிகல் சயின்ஸ் படித்துவரும் தீபாவுக்கு மிகக் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது. அதில் சமையலையும் கற்றிருக்கிறார். எப்பொழுதாவது டிவி பார்ப்பார். ஹிர்திக் ரோஷனும் கத்ரினாவும் அவரது விருப்பத்துக்குரியவர்கள்.
திருமணம் பற்றி?
“இந்தியக் கணவர்கள் தங்கள் மனைவியை அடக்கி வைக்கவே விரும்புகிறார்கள். எனக்குக் கட்டுப்பாடுகள் பிடிக்காது.
எனவே நான் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. என் முழு கவனமும் இந்தியாவுக்கு ஒலிம்பிக்ஸில் ஒரு பதக்கம் பெற்றுக் கொடுப்பதுதான். தீபா என்ற ஒரு பெண் இருந்தார் என்பதை இந்த உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் அல்லவா!’’ என்கிறார் அழுத்தமாக.
ஆகஸ்ட் மாதம் பிரேஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, போட்டியில் பங்கேற்க இருக்கிறார் தீபா. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வெற்றியே மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் தீபாவோ, ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே தன்னுடைய லட்சியம் என்று தீவிரமாகப் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.