உறுதிமொழியை இப்போது ஏன் எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரியிடம் விஜய்காந்த் வாக்குவாதம்
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது உறுதிமொழி எடுத்துக்கொள்ள அதிகாரி கூறியபோது உறுதிமொழி எடுக்க விஜயகாந்த் மறுத்ததாகவும், பிரேமலதா மற்றும் சுதீஷ் சமாதானப்படுத்திய பின்னரே உறுதிமொழி எடுத்ததாகவும், இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
உறுதி மொழி எடுத்தபின்னர், வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் உறுதி மொழி ஏற்பது தேவையற்றது என்றும் எனவே வேட்பு மனு ஏற்றுக்கொண்ட பின்னர் உறுதி மொழி ஏற்க சொல்லலாமே என்றும் விஜயகாந்த் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால் அதிகாரிகள் இப்போதே எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி விஜயகாந்த் உறுதிமொழி எடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜயகாந்த் வேட்புமனு செய்தபோது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி முகமது யூசுப் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.