தமிழ்நாட்டுக்கு வருமா விலையில்லா மணல்?
கட்டுமானப் பொருள்களில் முக்கியமானது மணல். கட்டுமானத் துறை கடந்த இரு பத்தாண்டுகளில் அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் அது தொடர்புடைய கட்டுமானப் பொருள்களுக்கான தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆற்று மணல் போன்ற கட்டுமானப் பொருள்களின் தேவையோ மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. அதனால் மணலுக்கு எப்போதும் இல்லாத மவுசு இன்றைக்கு வந்திருக்கிறது. இதனால் மணல் தட்டுப்பாடு வந்தது. ஆற்று மணலில் கலப்பட முறைகேடு நடந்தது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டல் கொள்ளை நடந்தது.
ஆற்று மணலுக்கு மாற்றாகப் பலவிதமாகத் தயாரிக்கப்படும் மணல்களும் இன்றைக்குப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் தட்டுப்பாடும் சுரண்டலும் நின்றபாடில்லை. ஆற்று மணல் அரசின் குவாரிகளில் இருந்து நேரடியாகப் பயனாளிகளுக்குச் சென்று சேரவில்லை. அதற்கிடையிலும் பலவிதமான தரகு நிலைகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. அரசிடம் இருந்து வாங்கப்படும் மணல் பயனாளரின் கைகளில் கிடைக்கும்போது அதன் விலை பன்மடங்காக இருக்கிறது.
இரண்டு மூன்று மடங்கு அதிகமாக மணலுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழலும் உள்ளது. போலியாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இதனால் கட்டுமான விலையும் அதிகமாகிறது. அரசின் திட்டம் மக்களுக்குப் போய்ச் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பது ஒரு சவாலான காரியம்தான்.
மணல் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கையாக அரசே மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கியது. ஆனாலும் மணல் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதையெல்லாம் ஒழங்குசெய்ய மணலை அத்தியாவசியப் பொருளாக அறிவிக்க வேண்டும் என்பது அத்துறைசார் கோரிக்கை.
இந்தக் கோரிக்கையை நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது. மணலை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் அம்மாநில அரசு சேர்த்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கான ஆற்று மணலை மக்களுக்கு முற்றிலும் இலவசமான வழங்க புதிய மணல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல இதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்டுள்ள தேவைகளுக்காக மட்டுமே மணல் எடுக்க முடியும். மணலைச் சேமித்து வைக்கக் கூடாது. மணலைக் கொண்டு செல்வதற்குண்டான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. மணலுக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்த அறிவிப்பு ஆந்திர கட்டுமானத் தொழிலை நம்பியிருப்போருக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் மணல் இலவசமாகுமா? என்பது இங்குள்ள கட்டுமானத் தொழில்சார் நிபணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது