பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்டமான அணை. சீனாவின் முயற்சியை இந்தியா தடுக்குமா?
சீனாவில் உள்ள திபெத் பீடபூமி வழியாக வற்றாத ஜீவநதியாக ஓடி வரும் பிரம்ம புத்திரா ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மங்களம் கவுன்டி மற்றும் சியாசின் மாகாணத்தில் படாங் கவுன்டி இடையே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டப்படவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இந்த அணை கட்டப்பட உள்ளதாகவும், இங்கு கட்டப்படும் நீர்மின் நிலையம் மூலம் ஆண்டுக்கு 5400 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த அணை கட்டும் பணி வரும் 2021ஆம் ஆண்டு முடியும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
தீபெத்தில் ஏற்கனவே பிரம்மபுத்திரா ஆற்றில் ஷாங்மூ என்ற இடத்தில் பெரிய அளவில் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் தற்போது கட்டப்படும் மின்நிலையம் அதைவிட மிகப்பெரியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்தியா இதை கடுமையாக எதிர்க்க திட்டமிட்டுள்ளது.