பிறந்த குழந்தையை தூக்குவது எப்படி?
தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.
திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.
பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.