தமாகவை உடைக்க சோனியா ரகசிய உத்தரவா? தமிழக அரசியலில் பரபரப்பு
ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்ததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் மேலும் ஒருசில முக்கிய தலைவர்களை தமாகவில் இருந்து இழுக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே தமாகவில் இருந்து பி.விஸ்வநாதன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்கள் இருவருக்கும் இந்த உத்தரவை சோனியா பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இருவரும் டெல்லி சென்று சோனியாவை சந்தித்தபோதுதான் இந்த உத்தரவு சோனியாவிடம் இருந்து வெளிவந்ததாகவும், அதே நேரத்தில் அதிமுகவில் இணைந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் குறித்தும் சோனியா இருவரிடம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தலைவியின் கட்டளைக்கு ஏற்ப தமாகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆள் இழுக்கும் பணி ஜோராக நடபெற்று வருகிறதாம். இதில் பணமும் விளையாடி வருவதால் விரைவில் ஒருசில தமாக தலைவர்கள் காங்கிரஸில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.