பள்ளியில் ஆசிரியர் அ, ஆ என்று கரும்பலகையில் எழுத, அந்த உயிரெழுத்துக்களையே ஓவிய வடிவமாகப் பார்த்தவர் மாலதி. அதனால்தான் இன்றுவரை கைவினைக் கலையிலும் ஓவியத்திலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். கடலூரைச் சேர்ந்த மாலதிக்குச் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் என்றாலும் முறைப்படி யாரிடமும் ஓவியம் பயின்றதில்லை.
“எனக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து ஏதாவது வரைந்துகொண்டும் கைவினைப் பொருட்களைச் செய்துகொண்டும் இருக்கிறேன். ஆனால், இதுவரை நான் ஒன்றுமே செய்யவில்லை, கற்க வேண்டியவை இன்னும் அதிகம் என்றே தோன்றுகிறது” என்று சொல்லும் மாலதி, சாக்பீஸ், தேங்காய் ஓடு, தென்னம்பட்டை, காய்ந்த மலர்கள், சோப்பு என்று சகலத்தையும் தன் திறமைக்கான அடித்தளமாகப் பயன்படுத்துகிறார். இவற்றை வைத்து விதவிதமான கைவினைப் பொருட்களைச் செய்கிறார். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரத்யேகமாக இவர் தயாரித்துத் தரும் வாழ்த்து அட்டைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டாம்!
கோலம் போடுவதிலும் மாலதிக்கு ஆர்வம் அதிகம். கோலப் போட்டி எங்கே நடந்தாலும்
புதுப் புதுக் கருத்துக்களில் தான் வரையும் ரங்கோலி, நிச்சயம் பரிசு வென்றுவிடும் என்று பெருமிதத்துடன் சொல்கிறார் மாலதி. தையல் கலையும் இவருக்குப் பரிச்சயம். சிறு வயதில் தன் பொம்மைகளுக்குத் தானே விதவிதமான ஆடைகள் தைத்துப் போட்டதை மகிழ்வுடன் நினைவுகூர்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்குச் சமையல் கலை மற்றும் கைவேலைப்பாட்டுப் பயிற்சியளித்திருக்கிறார்.