வாட்ஸ் அப் இணையதளத்திற்கு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
வாட்ஸ் அப் சமூக இணையதளத்திற்கு பிரேசில் நாட்டின் நீதிபதி 72 மணி நேரம் தடை விதித்து தீர்ப்பு அளித்தார் என்பதை நேற்று பார்த்தோம்,. இந்நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப்பை முழு அளவில் தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை அடுத்து அனைவரும் பயன்படுத்துவது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதும் வாட்ஸ் அப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ஆப்பில் பல்வேறு மாற்றங்களை சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் செய்திருந்தது. அதன்படி, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க முடியும் என்றும் நடுவில் வாட்ஸ் அப் நிறுவனம் உள்பட வேறு யாரும் அதை பார்க்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்கக்கோரி தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கதிர் யாதவ் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”வாட்ஸ் அப்பின் இந்த புதிய வசதி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எனவே, அந்த ஆப்பிற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.