110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து ஜெயலலிதா அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத்தொடர்களில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என முக்கிய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி உள்பட பலர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் விதி எண் 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, சென்னை மாநகராட்சியில் சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பது உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார். அதில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத்திற்கு ஒன்று விதமாக, 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைத்திடவும், ஒவ்வொரு விடுதியிலும் 60 மாணவ மாணவியர்களுக்கு உயர்தர பயிற்சிகளை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.