உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வெல்வாரா?
ரிஷிவந்தியம், விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளில் எவ்வித சிரமமும் இன்றி வெற்றி பெற்ற விஜயகாந்த் இந்த முறை உளுந்தூர்பேட்டையில் தேறுவாரா? என்பதை அவரது கட்சியினர்களே சந்தேகம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்முறை ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் புதியவர் என்ற எதிர்பார்ப்பிலும், இரண்டாவது முறையாக விருத்தாசலத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்பதாலும் இரண்டு முறை மிக எளிதாக விஜயகாந்த் வென்றார். ஆனால் தற்போது விஜயகாந்த், திமுக, அதிமுகவுக்கு மாற்று என்பதை மக்கள் நம்பத்தயாராக இல்லை. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும், இந்த தேர்தலில் கடைசி நேரம் வரை திமுகவுடன் பேரம் பேசியதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
மேலும் வலிமை இல்லாத மக்கள் நலக்கூட்டணியுடன் அவர் கூட்டணி வைக்க முடிவு செய்ததால் அவரது கட்சியில் இருந்தே ஒரு பிரிவினர் பிரிந்து சென்று திமுகவுடன் கூட்டணி வைத்தனர்.
மேலும் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார் என்பதை அறிந்ததும் பாமக உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் ராமமூர்த்தியை மாற்றிவிட்டு, அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவை வேட்பாளராக மாற்றியது. அதேபோல் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த தொகுதியை திமுக மீண்டும் பெற்று வலிமையான வேட்பாளரான ஜி.ஆர்.வசந்தவேல் அவர்களை நிறுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுரு அவர்களும் உள்ளூர்க்காரர் என்பதால் கடுமையான போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் விஜயகாந்த் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்ற நிலை இருந்ததாகவும் ஆனால் தற்போது அதிமுக, திமுக வேட்பாளர்கள் கடுமையாக தேர்தல் வேலை செய்வதால் விஜயகாந்தின் வெற்றி சந்தேகத்துக்குரியதாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.