24 திரைவிமர்சனம்
மேகமலை என்ற மலைக்கிராமத்தில் சூர்யா தனது மனைவி நித்யா மேனன் மற்றும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். விஞ்ஞானியான இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் காலத்தை மாற்றியமைக்கும் கைக்கடிகாரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இவரது அண்ணனான ஆத்ரேயா என்ற மற்றொரு சூர்யா, இந்த கடிகாரத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று துடிக்கிறார்.
இதில், நித்யாமேனனையும், விஞ்ஞானி சூர்யாவையும் கொன்றுவிட்டு, கடிகாரத்தை கைப்பற்ற பார்க்கிறார். இதில், நித்யாமேனன் பலியாகவே, விஞ்ஞானி சூர்யா தனது கைக்குழந்தையுடன் கடிகாரத்தையும் ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு, தப்பிக்கிறார். வழியில் பார்க்கும் சரண்யாவிடம் இரண்டையும் ஒப்படைத்துவிட்டு, இவர் மட்டும் செல்லும்போது, ஆத்ரேயா விஞ்ஞானியை சுட்டு கொன்றுவிடுகிறான்.
இறுதியில், ஆத்ரேயா கையில் அந்த கைக்கடிகாரமும், குழந்தையும் கிடைக்காமல் போகிறது. கைக்கடிகாரம் அடங்கிய பெட்டியின் சாவி மட்டும் இவன் கையில் மாட்டுகிறது. பின்னர், 26 ஆண்டுகள் கழித்து கதை நகர்கிறது. விஞ்ஞானி சூர்யாவின் கைக்குழந்தையான மணி என்ற சூர்யா, இளைஞனாக சென்னையில் சொந்தமாக கடிகாரக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ‘24’ என்ற லோகோவுடன் இருக்கும் கைக்கடிகாரம் அடங்கிய பெட்டியின் சாவி கிடைக்காததால் அது பற்றிய மகத்துவம் தெரியாத சாதாரண ஒரு பொருளாகவே பார்த்து வருகிறார் சூர்யா.
மறுமுனையில், 26 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ஆத்ரேயா, கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அந்த 26 ஆண்டுகளும் அவரது கையில் அந்த கைக்கடிகார பெட்டியின் சாவி இருக்கிறது. ஒருகட்டத்தில், அந்த சாவி இவரது கையில் இருந்து கீழே விழுந்து, மணி சூர்யாவின் கைக்கு கிடைக்கிறது. அந்த சாவியில் இருக்கும் 24 என்ற நம்பரும், பெட்டியில் இருக்கும் 24 நம்பரும் ஒன்றாக இருப்பதை உணர்ந்த சூர்யா, அந்த பெட்டியை இந்த சாவியை கொண்டு திறக்கிறார். அப்போதுதான், சூர்யாவுக்கு அந்த கடிகாரத்தை பற்றிய மகத்துவம் தெரிய வருகிறது.
அந்த கடிகாரத்தை வைத்து தனது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார் சூர்யா. இந்த கடிகாரத்தை வைத்தே சமந்தாவையும் காதல் வசப்பட வைக்கிறார். இந்நிலையில், கோமாவில் இருந்து திரும்பிய ஆத்ரேயா, தன் நிலையை பார்த்து மிகவும் கோபமும் எரிச்சலும் அடைகிறார். தனது தம்பி கண்டுபிடித்த கடிகாரம் மூலமாகத்தான் தனது நிலையை சரிசெய்ய முடியும் என்று எண்ணி, அந்த கடிகாரத்தை தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில், அந்த கடிகாரத்தை கண்டுபிடித்து, தனது நிலையை மாற்றிக்கொண்டாரா? இல்லையா? என்பதே சயின்ஸ் பிக்சன் கலந்த திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார்.
சூர்யா, விஞ்ஞானி, வில்லன், இளமை என மூன்று தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதிலும், வில்லன் தோற்றத்தில் இவர் காட்டும் முகபாவனைகள் மிரள வைக்கிறது. கோமா நிலையில் இருந்து திரும்பிய பிறகு அவரது கோரமான முகத்துடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவர்கிறது. விஞ்ஞானி தோற்றத்தில் வரும் சூர்யா மிகவும் அப்பாவியான தோற்றத்துடன் ரசிக்க வைக்கிறார். இளைஞனாக வரும் சூர்யா, ரொமான்ஸ், காமெடி கலாட்டா என ஜாலியாக வருகிறார். மூன்று தோற்றங்களுக்கும் தன்னை வேறுபடுத்தி காட்ட சூர்யா மிகவும் சிரமப்பட்டிருப்பது இதில் நன்றாகவே தெரிகிறது.
நித்யாமேனன், ஒரு சில காட்சிகளே வந்தாலும், தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். நடிப்பிலும் ரசிகர்கள் மனதில் அழகாக பதிந்திருக்கிறார். சமந்தா வரும் காட்சிகள் எல்லாம் ரொமான்ஸ், காமெடி என களைகட்டுகிறது. ஒருசில காட்சிகளில் மிகவும் வெகுளியாக நடித்து ரசிக்க வைக்கிறார். இளமை சூர்யாவின் நண்பராக வரும் சத்யன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் பாசமுள்ள அம்மாவாக மனதில் பதிகிறார்,
இயக்குனர் விக்ரம் குமார் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் மிகவும் தெளிவாக எடுத்திருக்கிறார். எந்தவொரு காட்சியிலும் சினிமாத்தனம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார். இவருடைய திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். கைக்கடிகாரத்தை வைத்து காலத்திற்கு முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லும் காட்சிகளை தெளிவாகவும், ரசிகர்களுக்கு புரியும்படியும் எடுத்திருப்பது சிறப்பு.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ‘காலம் என் காதலியோ’ என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. காட்சிகளும், கதாபாத்திரங்களும் இவரது கேமராவில் அழகாகவும், தெளிவாகவும் படமாகியிருக்கிறது. அதேபோல், கடிகாரம் மாறும் காட்சிகள், மழை பாதியிலேயே நிற்கும் காட்சிகள் என கிராபிக்ஸ் காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாய் இருக்கிறது.
மொத்தத்தில் ‘24’ காலத்தை வெல்லும்.