நவீன இந்தியாவின் கட்டிடங்கள்
இந்திய கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்ற நாடுகளுள் ஒன்று. தலைநகர் டெல்லியில் இருந்து தென்கோடி முனை கன்னியாகுமரி வரை இருக்கும் இந்தப் பாரத தேசத்தில் நூற்றாண்டுப் பழமைவாய்ந்த கட்டிடங்கள் பல உள்ளன. கோயில்கள், அரண்மனைகள், நினைவுத் தூண்கள் எனப் பலவிதமான கட்டிடங்கள், கலாசரங்களின் கண்ணாடியாக உள்ளன. வட இந்தியப் பிரதேசத்தை ஆண்ட முகலாயர்கள், ராஜபுத்திரர்கள், மவுரியர்கள், குப்தர்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷார் எனப் பல மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டார்கள். தெற்கே சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர், விஜயநகரப் பேரரசு, டெல்லி சுல்தான்கள், பல்லவப் பேரரசு போன்றோர் வல்லுமை மிக்க அரசுகளாக இருந்தனர். இந்த இரு பகுதிகளில் இந்தப் பேரரசுகளின் பெருமை முக்க அடையாளங்களாக கட்டிடங்கள் இன்றும் உள்ளன.
உதாரணமாக முகலாயப் பேரரசுகளின் பெருமை மிக்க அடையாளமாக செங்கோட்டை, தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை போன்ற கட்டிடங்கள் உள்ளன. அதேபோல தெற்கே சோழர்களின் அடையாளமாக தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரக் கோயில் ஆகியவற்றைச் சொல்லலாம். விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் மதுரையில் பல மண்படங்கள், அரண்மனைகள் கட்டப்பட்டன. இவை மட்டுமல்ல பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அலுவல் ரீதியான பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. சென்னையில் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை, ராஜாஜி அரங்கம், உயர்நீதி மன்றக் கட்டிடம் போன்றவை பிரிட்டிஷ் ஆட்சியின் பெருமை பேசும் கட்டிடங்கள்.
சுதந்திர இந்தியாவிலும் பல முக்கியமான கட்டிடங்கள் கட்டப்பட்டன. பொதுப் பயன்பாட்டுக்காக அரசாலும் தனியார் கட்டிடங்களும் கட்டப்பட்டன. சென்னை அரசுப் பொதுமருத்துவமனை தமிழக அரசால் கட்டபட்ட கட்டிடமாகும். அதுபோல சென்னை எல்.ஐ.சி. கட்டிடம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் எம்.சிதம்பரத்தின் அலுவலகப் பயன்பாட்டுக்காகக் கட்டத் தொடங்கிய கட்டிடம். இன்றும் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக இந்தக் கட்டிடம் இருந்துவருகிறது.
இருபதாம் நூற்றாண்டில் கட்டுமானத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உலகம் முழுவதும் நவீன பாணியிலான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவிலும் உலகமயமாக்கலுக்குப் பிறகு பன்னாட்டு நிறுவங்களின் அலுவலக, தொழிற்சாலைகளின் தேவைகளை உருவாக்கும் பொருட்டு பல விதமான கட்டிடங்கள் கட்டப்பட்டன. மேலும் கலைநயம் மிக்க கோயில்களும்கூட உருவாக்கப்பட்டன. இந்தியாவின் மரபான கட்டிடக் கலையை உள்வாங்கிக் கொண்டு புதிய பாணியில் கோயில்கள் உருவாக்கப்பட்டன. தலைநகர் டெல்லியில் கட்டப்பட்ட அக்ஷர்தாம் கோயில் அவற்றுள் முக்கியமானது. சென்னை சிறுசேரியில் கட்டப்பட்ட டாடா கன்சல்டன்சி மென்பொருள் நிறுவனத்தின் கட்டமைப்பும் கவனிக்கத்தக்கது. முட்டை வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன இன்போஷிஸ் நிறுவனத்தின் புனே அலுவலகம் சமீபத்திய கட்டிடங்களில் குறிப்பிடத்தகுந்தாகப் பேசப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க இயற்கைசார்ந்த கட்டிடக் கலை குறித்தான விழிப்புணர்வை உருவாக்கிய லாரி பேக்கரின் கட்டிடங்களும் அந்த விதத்தில் முக்கியமானவை. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அவர், இந்தியன் காஃபி ஹவுஸுக்காக உருவாக்கிய கட்டிடம் முழுவதும் இயற்கையை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. மட்டுமல்லாது மாடிப் படிகள் இருக்கும் இடத்தில் சாய்வுதளமாக மேலேறிச் செல்லும் வகையில் உணவு மேஜைகளை வடிவமைத்துள்ளார். மேலும் மும்பையின் இம்பீரியல் கட்டிடம் இந்தியாவின் முதல் வானுயர்க் கட்டிடம் என்ற வகையில் முக்கியத்துவமானது.