தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்விப் பட்டயத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுத் தேர்வுத்துறை சார்பில் ஜூன் மாதம் தொடக்கக் கல்விப் பட்டயத்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுத தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தேர்வுக்காக, தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ரூ.200, ஆன்லைன் கட்டணம் ரூ.50, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15 என மொத்தம் ரூ.315 செலுத்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 9-ஆம் தேதி மதியம் முதல் மே 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.