ஆட்டம் காணும் ஆன்லைன் மளிகைக் கடைகள்
‘வாங்கம்மா,வீட்டுக்கு விருந் தாளிகள் வந்திருக்காங்க போல, வெல்லமும், முந்திரியும் லிஸ்டில் இருக்கு. சாயந்திரம் வீட்டில பையன் டெலிவரி கொடுத்துடுவான்” என்று அன்பொழுக பேசும் அண்ணாச்சிகளின் கரிசனமான பேச்சு நகர்ப்புற மக்களுக்கு சற்று அந்நியம்தான். இன்னும் சற்று மேலே போய் வீட்டுக்கு வந்துள்ள சின்னஞ் சிறுசுகளுக்கென இலவசமாக பேரிச்சம் பழ பாக்கெட்டை அளித்து வாடிக்கை யாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் பாரம்பரிய கடைகளும் உண்டு.
இது தகவல் தொழில்நுட்ப யுகம். அண்டை வீட்டாரை அறியாத அளவுக்கு காலையிலிருந்து இரவு வரை டென்ஷனான வேலைப்பளு.
கடைக்குப் போய் வீட்டுக்குத் தேவை யான மளிகை சாமான் வாங்கக் கூட நேரமில்லாத நபர்களைக் குறிவைத்து இந்தியச் சந்தையில் கடை விரித்தன பல ஆன்லைன் நிறுவனங்கள்.
அன்றாடம் கம்ப்யூட்டர் முன்பாக பணியாற்றும் ஆண், பெண் இருபாலருமே வீட்டுக்குத் தேவையானவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யத் தொடங்கினர்.
பெப்பர் டாப், ஓலா ஸ்டோர், பிளிப்கார்டின் நியர்பை, லோக்கல் பான்யா, குரோஃபர்ஸ், பேடிஎம், பிக் பாஸ்கெட், மை கிரஹக் என ஆன்லைன் மளிகைக் கடைகளின் பட்டியல் நீளும். போதாக்குறைக்கு உள்ளூர் அளவிலும் பல ஆன்லைன் கடைகள் இதில் சேரும்.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு, நகர்ப்புற மக்களின் வருமானம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு ஆன்லைன் மளிகைக் கடைகளைத் திறந்த நிறுவனங்கள் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக மூடி வருகின்றன.
ஆன்லைன் மளிகைக் கடைகளுக்கு அமோக வரவேற்பிருக்கும் என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக இவை தொடங்கப்பட்டன. இவற்றுக்கு அதிக அளவில் முதலீடுகளும் கிடைத்தன. ஆனால் எதிர்பார்ப்பு முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது.
பெப்பர் டாப் என்ற ஆன்லைன் நிறுவனம் 2014 நவம்பரில் தொடங்கப் பட்டது. ஸ்நாப்டீல் நிறுவனத்தின் பின்புலத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு நான்கு சுற்றுகளில் முதலீடுகளும் குவிந்தன. ஆனால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் தனது வர்த்தகத்தை முழுமையாக நிறுத்திவிட்டது.
ஓலா ஸ்டோர், செயலி மூலமாக வாடகைக் கார், ஆட்டோ சேவையை அளிக்கும் ஓலா நிறுவனம் 2015-ம் ஆண்டு ஜூலையில் செயலி மூலமான மளிகை விற்பனையைத் தொடங்கியது. 7 மாதங்களுக்குப் பிறகு அதாவது 2016 மார்ச் மாதம் மளிகைக்கடை செயலியை முடக்கிவிட்டது.
ஆன்லைன் விற்பனையில் அமேசானுக்குப் போட்டியாகத் திகழும் பிளிப்கார்ட்டும் தனது பங்கிற்கு 2015-ம் ஆண்டு அக்டோபரில் நியர்பை என்ற பெயரில் மளிகை விற்பனையைத் தொடங்கியது. சோதனை ரீதியாக தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் கடையைத் திறந்தது. ஆனால் 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் விற்பனையை நிறுத்திவிட்டது.
லோக்கல் பன்யா, உள்ளூர் பெயரில் ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடங்கினால் விற்பனை அமோகமாக இருக்கும் என்ற சென்டிமென்டில் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மூச்சைப் பிடித்து நடத்திய இந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் தனது நிறுவனப் பணியாளர்களில் பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்பியது. கடைசியில் ஆன்லைன் விற்பனை இல்லை என்று அறிவித்துவிட்டது. இ-வாலட்களில் மிகவும் பிரபலமானது பேடிஎம். இந்நிறுவனமும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தனது செயலி மூலமான மளிகை விற்பனையைத் தொடங்கி கடைசியில் மூடிவிட்டது.
குரோஃபர்ஸ் நிறுவனம் 2013-ல் தொடங்கப்பட்டு தற்போது 9 நகரங்களில் தனது சேவையை நிறுத்தி விட்டது.
ஆன்லைன் மளிகை வியாபாரத்தில் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கடந்த ஆண்டு அக்டோபரிலேயே எச்சரிக்கை மணியை குரோஃபர்ஸ் நிறுவனம் அடித்துவிட்டது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தனது சேவையை சில காலம் நிறுத்திகூட வைத்தது.
குரோஃபர்ஸ் நிறுவனம் 20 கோடி டாலர் வரை முதலீடு திரட்டியுள்ளது. இதில் நான்கில் ஒரு பகுதி மூலதனத்தைத் திரட்டிய பெப்பர் டாப் நிறுவனம் இப்போது மூடப்பட்டு விட்டது.
என்ன காரணம்?
மின்னணு பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது போல மளிகைப் பொருள்களையும் டெலிவரி செய்ய முடியும் என பெரும்பாலான நிறுவனங்கள் நினைத்தது முதல் தவறு.
உள்ளூர் சந்தையை கைப்பற்றும் நோக்கில் அதிக அளவில் தள்ளுபடி கொடுத்து, அதை தொடர முடியாத நிலையில் நஷ்டத்தில் மூடிய நிறுவனங்களே அதிகம்.
அனைத்துக்கும் மேலாக பொருள்களை டெலிவரி கொடுப்பதற்கு அதிக செலவு பிடித்ததும் முக்கிய காரணமாகும்.
பெரும்பாலும் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் இரண்டு வகையில் செயல் பட்டன. தேவையான பொருள்களை அந்தந்தப் பகுதியில் உள்ள சில்லரை வர்த்தக நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து ஆர்டருக்கு ஏற்ப டெலிவரி செய்தன. இந்த முறையைப் பின்பற்றி செயல்பட்ட பெப்பர் டாப், அதிக சலுகைகளை அளித்ததால் கடுமையான நஷ்டத்தை சந்தித்து மூட வேண்டியதாகிவிட்டது.
மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பிக்பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் தற்போது ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கின்றன. ஆனாலும் இவையும் இதுவரை லாபம் ஈட்டவில்லை.
சில்லரை வர்த்தக வியாபாரிகளிட மிருந்து கொள்முதல் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் போது லாபம் மிக மிகக்குறைவாக இருக்கும். அதேசமயம் மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி விற்பதில் ஓரளவு லாபம் கிடைக்கும். இந்த வர்த்தகத்தில் 2 சதவீத லாபம்தான் கிடைக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மளிகைப் பொருள்களுக்கு டெலிவரி கட்டணம் அளிக்கும் பழக்கம் இன்னமும் இங்கு வரவில்லை.
ஆர்டர் செய்தவுடன் 30 நிமிஷத்தில் வீட்டுக்குப் பொருள் வர வேண்டும் என்று எதிர்பார்ப்போர் அதிகம். அதிக பொருளாயிருப்பின் மறு நாள் காலையில் வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதனால் சரக்குகளை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு ஆகும் செலவு அதிகரித்ததும் ஆன்லைன் மளிகைக் கடைகளின் நஷ்டத்துக்குப் பிரதான காரணமாகும்.
மளிகைப் பொருள்களில் சில அழுகும் தன்மை கொண்டவைகளும் உள்ளன. இவற்றை பாதுகாக்க அதிக குளிரூட்டிகள் அவசியம். இவற்றை பராமரிப்பதும் அதிக செலவு பிடிக்கும் விஷயமாகும்.
குரோஃபர்ஸ் நிறுவனம் போதிய வரவேற்பு இல்லாத போபால், புவனேஸ்வரம், கோயம்புத்தூர், கொச்சி, லூதியானா, மைசூர், நாசிக், ராஜ்கோட், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 9 நகரங்களில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டதன் பின்னணி காரணமும் இதுதான்.
இப்போது ஒவ்வொரு பகுதியிலும் அங்காடிகள், மால்கள் என வரத் தொடங்கியுள்ளன. நகர் பகுதிகளில் வசிப்போர் வார இறுதி நாள்களில் இங்கு சென்று தேவையானவற்றை வாங்கிக் கொள்கின்றனர். மேலும் இத்தகைய அங்காடிகளில் குழந்தை விளையாடும் இடம், உணவகம் ஆகியன இருப்பதால் வார இறுதி நாள்களில் உபயோகமான பொழுதுபோக்கு இடமாகவும் இவை மாறி வருகின்றன. இதனால் ஆன்லைன் மளிகைக் கடைகளின் மவுசு குறைந்துவிட்டது.
அனைத்துக்கும் மேலாக பட்டியலிடப் படும் பொருள்களில் பெரும்பாலானவை ஸ்டாக் இருப்பதில்லை. 30 பொருள் களைப் பட்டியலிட்டால் அதில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பொருள்கள் இருப்பதில்லை. விடுபட்டு போன பொருள்களை அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டி நிலை உருவாகிறது.
உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படுவதில்லை. சில பொருள்கள் கிடைப்பதில்லை என்பதும் மிகப் பெரிய குற்றச்சாட்டாக இவற்றின் மீது கூறப்படுகிறது.
ஆன்லைன் நிறுவனங்கள் மளிகை விற்பனையில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக மக்களின் மனித உறவு பிரதானம். அதை உள்ளூர் அண்ணாச்சிகள் செவ்வனே செய்யும் வரை ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமல்ல வால்மார்ட்டே சில்லரை வர்த்தகத்தில் வந்தாலும் தோற்றுத்தான் போகும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்.