ஆட்சியை பிடிப்பது யார்? சென்னை டுடே நியூஸ் கருத்துக்கணிப்பின் முடிவுகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்று மாலைக்கு பின்னர் கருத்துக்கணிப்புகளும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நமது சென்னை டுடே நியூஸ் நிருபர்கள் எடுத்த கருத்துகக்ணிப்பை தற்போது வெளியிடுகிறோம்.
வாக்காளர்களின் மனநிலை: இந்த தேர்தலில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாக்காளர்கள் சிலருக்கு ஆளுங்கட்சியின் மீது அதிருப்தி இருப்பது உண்மை என்றாலும் மீதியுள்ள தொகுதியில் பெரிய அதிருப்தி அலைகள் எதுவும் தென்படவில்லை.
மாற்று அணி எடுபடுமா?: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சி வேண்டும் என கிட்டத்தட்ட அனைத்து நடுநிலை வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மாற்று கூட்டணி என்று கூறிக்கொண்டிருக்கும் மக்கள் நல கூட்டணி, பாமக, நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை கூட்டணிகளை அதிமுக, திமுகவுக்கு மாற்றுக்கட்சியாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே கடந்த பல தேர்தலில் இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் நம்பகத்தன்மை குறைந்து காணப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு மாற்றுத்தலைவராக மக்கள் மனதில் தோன்றினார் என்பது உண்மைதான். ஆனால் கடந்த தேர்தலில் அதிமுகவுடனும், இந்த தேர்தலில் கடைசிவரை திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியதாலும் அவருடைய நம்பகத்தன்மையும் தவிடுபொடியாகிவிட்டது. இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியுள்ளது என்பதை நமது நிருபர்கள் கணித்துள்ளனர்.
திமுக நிலை என்ன?: திமுக கூட்டணி இதுவரை பெற்று வந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் அதன் கூட்டணி கட்சிகள்தான். கூட்டணி பலத்தை வைத்தே திமுக இதுவரை தப்பித்து வந்தது. ஆனால் இந்த முறை அனைத்து கட்சிகளுமே சுதாரித்து கொண்டதால் எந்த பிரதான கட்சியும் திமுகவுடன் கூட்டணியில் இணைய விரும்பவில்லை. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் தனியாக நிற்பதும் கிட்டத்தட்ட சமம் என்பதால் திமுக கூட்டணியும் இந்த முறை கணிசமான தொகுதிகளில் தோல்வி அடைவதாக நமது நிருபர்கள் கணித்துள்ளனர்.
அதிமுகவுக்கு சாதகமா?: திமுக கூட்டணியின் பலவீனம், மக்கள் நலக்கூட்டணியின் நம்பத்தன்மை, ஆளுங்கட்சியின் அதிருப்தி ஓட்டுக்கள் பிரிவது ஆகியவை அதிமுகவுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளது. எனவே நமது கணிப்பின்படி அதிமுக கூட்டணி 140 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் என்று கணிக்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு 40 முதல் 60 இடங்களும் மக்கள் நலக்கூட்டணிக்கு 5 முதல் 10 தொகுதிகளும் பாமகவுக்கு 1 தொகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றே நம்து கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.
முக்கிய தலைவர்களை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், அன்புமணி, கிருஷ்ணசாமி, ஆகியோர் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்றும், விஜயகாந்த், திருமாவளவன், சரத்குமார் ஆகியோர்களின் வெற்றி இழுபறியில் உள்ளதாகவும், தமிழிசை செளந்திரராஜன், சீமான் ஆகியோர் வெற்றி பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தலில் பரபரப்பாக பேசப்பட்ட நோட்டா 5%வரை வாக்குகள் பெறும் என்று கணிக்கப்படுகிறது.
மேற்பட்ட நமது கருத்துக்கணிப்பு எந்த அளவுக்கு சரியாக இருக்கின்றது என்பதை வரும் 19ஆம் தேதி வாசகர்கள் சரிபார்த்துக்கொள்ளவும்