சாலை விபத்தில் மரணம் அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம். அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை மிகுந்த சிரமங்களுக்கு பின்னர் மருத்துவர்கள் உயிருடன் வெளியே கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள மிசெளரி என்ற மாகாணத்தில் மேட் ரைடர்-சாரா ஐலர் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாரா ஐலருக்கு சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்ட போது அவரது கணவர் சாராவை காரில் அழைத்து சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த மேட் ரைடர்-சாரா ஐலர் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சாரா ஐலர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சாராவின் கருப்பையில் இருக்கும் சிசுவையாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்த மருத்துவர்கள் சாரா ஐலர் உடலில் அவசர “சிசேரியன்’ அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். பெரும் முயற்சிக்கு பின்னர் இறந்து போன சாராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது., 2.2 கிலோ எடையுடன் ஆரோக்கியமான பிறந்த அந்தக் குழந்தைக்கு உடனடியாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.
தற்போது செயற்கை சுவாசக் கருவியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்த அதிசயக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். இந்தக் குழந்தைக்கு மேடிஸன் என்று பெயரிடப்பட்டுள்ளது.