குளுமை தரும் பசுமை வீடுகள்
நாட்டைப் பொறுத்தமட்டில் ஆண்டின் பெரும்பான மாதங்கள் வெயில்தான். கோரமான வெயில், சுட்டெரிக்கும் வெயில், மிதமான வெயில் என வெயிலைத்தான் பட்டியலிட முடியும். சூரியன் இறங்கி விளையாடும் மைதானம் போன்றவை நம் நிலங்கள் எனலாம். நாட்டின் சில கோடை வாசஸ்தலங்களை விட்டால் பெரும்பாலான ஊர்களில் வெயில்தான். வெயில் காலத்தில் வீட்டுக்குள் வசிப்பதே மிகச் சிரமமான காரியம்தான். பகலில் சூரியனின் நேரடியான தாக்கம் இருக்கும். இரவில் நம் கான்கிரீட் கட்டிடங்கள் வெயிலை வாங்கிக் கொண்டு இரவில் உமிழும். அதனால் இரவு பகலைவிடச் சமாளிக்க முடியாததாக இருக்கும்.
நமது இந்த வெயிலை முன்னுணரந்து, அதைச் சமாளிக்கும் விதத்தில்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கைக்கு நெருக்கமாகக் கட்டிடங்கள் கட்டினர்.
நம் பகுதிகளிலேயே கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றைக் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தினார்கள். அவைதான் முன்மாதிரியான பசுமை வீடுகள். வீட்டின் கழிவுகளைச் சேமித்துவைத்து வயலுக்கு உரமாகப் பயன்படுத்தினார்கள். இயல்பாகவே நம் முன்னோர்கள் உருவாக்கிய பசுமை இல்லம் இன்று புதிய தொழில் நுட்பமாகி இருக்கிறது. உலகம் முழுவதும் இயற்கைக்கு நெருக்கமான கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நடந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பகுதியின் சுற்றுச் சூழலை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கும்படியான வீடுகளைக் கட்டி அவற்றில்தான் தங்கள் வாழ்வை நடத்திவந்தார்கள் முன்னோர்கள். வீடுகளின் பல பகுதிகளை மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. கதவுகள், சன்னல்கள், வீட்டின் கூரைகள், வீட்டைப் பிரிக்க மரத்தடுப்புகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு மரங்கள் உதவின. மரப் பலகைகள் வெப்பத்தைக் கடத்தாது, அதைத் தடுத்து நிறுத்திவிடும்.
எனவே அதிகமான வெயிலின் காரணமாக வெளியே வெப்பம் அதிகமாக இருந்தாலும்கூட வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் போதும் உள்பகுதி குளுகுளுவென்றிருக்கும். அதே போல் குளிர்காலத்தில் வீட்டின் வெளியே கடுமையான குளிர் நிலவும்போதும் வீட்டுக்குள் பெரிய அளவில் குளிர் தெரியாது. ஓரளவு கதகதப்பாகவே வீட்டின் தட்பவெப்பம் இருக்கும்.
இப்போது நமது இல்லத்தின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகமான பணத்தைச் செலவு செய்து, கான்கிரீட்டையும், இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தி நமக்கான வீடுகளை கட்டியெழுப்புகிறோம். மரங்களின் பயன்பாட்டை மிகவும் குறைத்துவிட்டோம். கட்டில், பீரோ போன்ற அனைத்து அறைக்கலன்களும் முழுக்க முழுக்க மரத்தாலேயே உருவாக்கப்பட்ட காலம் காலாவதியாகிவிட்டது.
அந்தக் கால வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் கண்முன் கொண்டுவந்து பாருங்கள். எவ்வளவு ரம்மியமாக உள்ளது. நவீன வீடுகளின் உருவாக்கத்தில் சில வசதிகளைப் பெற்றுள்ளோம் என்றாலும் வெப்பத்திலிருந்து விடுதலை தர உதவும் மரத்தை மறந்துவிட்டோம். வெயிலில் தாங்கள் நின்று நிழலை மனிதர்களுக்குத் தரும் பயன் கருதாத மரங்களை இழைத்துப் போட்டாலும் விசுவாசம் காட்டும் பசுமையான அவற்றை விட்டு வெகு தூரம் விலகிவிட்டோம்.
ஆனால் மரங்களாலான அந்தக் கால வீடுகளைக் கடந்து செல்லும்போது ஏதோவோர் ஏக்கம் வந்துசெல்கிறது. அந்தப் பழங்கால உத்தியைப் பயன்படுத்தி சிலர் இப்போதும் வீடுகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மரத்தைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு வீடுகளை அமைப்பதைப் போல மரத்திலேயேகூட வீடு கட்டிக் குடியேறலாம். துணிச்சலும் இயற்கை மீது நேசமும், வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இப்போது கிடைக்கின்றன. இப்படியான மர வீடுகள் அனைத்துமே தனித்துவமானவை. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகையில் வித்தியாசப்படுபவை. ஒன்று போல் ஒன்று இல்லாத மாதிரியான பிரத்யேக வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் மரத்தில் கட்டப்படும் இந்த வீடுகள் ஒவ்வொன்றின் அழகும் பசுமையான சூழலும் மட்டும் மாறாமல் அப்படியே ஒன்றுபோல் இருக்கும்.
முற்றிலும் மரப்பலகைகளைப் பயப்படுத்தி மரங்கள் சூழ்ந்த தோட்டங்களுக்கு மத்தியிலும் வீடுகளை அமைக்கலாம். மரங்களால் அமைக்கப்படும் இத்தகைய வீடுகளில் பாதங்கள் தரையைத் தொட வேண்டிய தேவையிருக்காது. என்ன பார்க்கிறீர்கள், முழுக்க முழுக்க மரங்களால் வீடு உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் நீங்கள் கால் வைக்கும் இடம் எல்லாமே மரத்தால் ஆனவைதான். கால் மட்டுமல்ல உங்கள் கைபடும், கண் படும் அனைத்துப் பகுதிகளும் அதாவது சுவர்கள், கூரைகள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையே.
வீட்டின் கூரைமீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கலாம். தேவைக்காக அறைகளைப் பிரிக்க பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைக்கலாம். வீட்டின் மேற்கூரையில் புற்களை வளர்க்கலாம். இப்படி அனைத்துக் கட்டுமானப் பொருள்களும் இயற்கைப் பொருளாக இருக்கும்போது வீட்டில் வெயிலின் பாதிப்புக் குறைவாகவே இருக்கும்.