வணிக வளாகமாக மாறுகிறது சென்னை சாந்தி திரையரங்கம்!

வணிக வளாகமாக மாறுகிறது சென்னை சாந்தி திரையரங்கம்!
shanthi
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அண்ணா சாலையில் கம்பீரமாக வீற்றிருந்த திரையரங்குகளில் ஒன்றான சாந்தி திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட்டு, வணிக வளாகமாக மாற உள்ளது. இந்த திரையரங்கில் நேற்றுடன் காட்சிகள் முடிக்கப்பட்டு விரைவில் இடிக்கும் பணி ஆரம்பமாக உள்ளது.

1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது இந்தத் திரையரங்கம். அப்போது சென்னை அண்ணா சாலையில் இருந்த ஒரே ஏ/சி திரையங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஸ்வர ராவ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘தூய உள்ளம்’ என்ற திரைப்படம்தான் இங்கு திரையிடப்பட்ட முதல் படமாகும். அதே வருடம் மார்ச் 16-ல் சிவாஜி நடித்த ‘பாவ மன்னிப்பு’ வெளியானது. இதுதான் இங்கு வெளியான முதல் சிவாஜி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று இந்த வளாகத்தில் இன்னொரு திரையரங்கம் கட்டப்பட்டு அதற்கு சாய் சாந்தி என்று பெயரிடப்பட்டது. இதை கமல்ஹாசன் திறந்துவைத்தார். 55 வருடங்கள் திரையுலகிற்கு சேவை செய்து வந்த இந்த திரையரங்கம் தற்போது  வணிக வளாகமாக மாற உள்ளது. இந்த திரையரங்கில் சூர்யா நடித்த 24 படம் தான் வெளியான கடைசிப் படமாகும்.

இங்கு, சிவாஜியின் 85 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் 35 படங்கள் நூறு நாள்கள் ஓடியுள்ளன. 6 படங்கள் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன.

பிரபு நடித்த சின்னத் தம்பி படம் இங்கு 205 நாள்கள் ஓடியது.

ரஜினி நடித்த சந்திரமுகி படம் தினமும் மூன்று காட்சிகளாக 202 நாள்கள் ஓடியது. பிறகு ஒரு காட்சியாக 808 நாள்கள் ஓடி சாதனை செய்தது.

1964-ல் ஹிந்திப் படமான ‘சங்கம்’ வெளியாகி 188 நாள்கள் ஓடியது. இதனால் அந்தச் சமயத்தில் வெளியான சிவாஜி நடித்த ‘புதிய பறவை’ படத்தை இங்கு வெளியிடமுடியாமல் போனது. இதனால் பாரகன் திரையரங்கில் புதிய பறவை வெளியானது.

Leave a Reply