மக்கள் நலக்கூட்டணி அடுத்து என்ன ஆகும்?
நாங்கள்தான் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று மார்தட்டி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தமாகவையும் இணைத்து ஒரு மெகா கூட்டணியை வைகோ அமைத்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போல ஆட்சியை பிடிப்போம் என்று சூளுரைத்தனர். ஆனால் தேர்தல் முடிவு மக்கள் நலக்கூட்டணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது மக்கள் முழுவதும் இந்த கூட்டணியை நிராகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
அதிமுக, திமுகவுக்கு மாற்று என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கூறியதை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுகவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கிய வைகோ, மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அவரது நம்பக்கத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒருவரை நம்பி மற்ற கட்சிகள் களமிறங்கி தங்களுடைய வாக்குகளை இழந்துவிட்டன.
இனி எதிர்காலத்தில் மக்கள் நலக்கூட்டணி உடையும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.