விஜயகாந்த்-வைகோ-வாசன். வீழ்ச்சி அடைந்த மூன்று V-தலைவர்கள்.
கிங் மேக்கர் என்றும், கிங் என்றும் முதல்வர் வேட்பாளர் என்றும், தமிழக அரசியலே இவரை சுற்றித்தான் இருக்கின்றார் என்றும், இவர் எந்த கூட்டணியில் சேருவார் என்று அனைத்து கட்சிகளும் எதிர்நோக்கியுள்ளது என்றும் ஊடகங்களால் பில்டப் செய்யப்பட்ட தலைவர் விஜயகாந்த். ஆனால் உண்மையில் அவர் ஒரு ஜோக்கர் என்பது இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. டெபாசிட் கூட வாங்க முடியாத ஒரு தலைவர் இனியும் அரசியலில் நீடிக்க வேண்டுமா? என்பதை அவர்தான் இனி முடிவு செய்ய வேண்டும்.
வைகோ: ஐம்பதாண்டு அரசியல் அனுபவம் இருந்தும் இன்னும் ஒருமுறைகூட எம்.எல்.ஏ ஆகமுடியாதவர், தேர்தலில் போட்டியிடவே தயங்குபவர், வாய்ச்சொல்லில் வீரர் என்று விமர்சனம் செய்யக்கூடியவரான வைகோ, மக்கள் செல்வாக்கே இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி இதுதான் மாற்றத்தை தரக்கூடிய கூட்டணி என்ற ஒரு மாயையை ஏற்படுத்தியவர். வெறும், பேச்சு மட்டுமின்றி செயலிலும் ஈடுபட்டால்தான் இவரது அரசியல் எதிர்காலம் ஓரளவிற்காவது பிரகாசமாக இருக்கும்.
வாசன்: காங்கிரஸ் கட்சிக்கே தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அதில் இருந்து பிரிந்து வந்து நோட்டா பெற்ற வாக்குகளை கூட பெறமுடியாத அளவில் இவரது வேட்பாளர்கள் உள்ளனர். கடைசி வரை அதிமுகவிடம் கூட்டணிக்காக மன்றாடிவிட்டு அங்கு இடம் கிடைக்காததால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்ற கதையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார். இவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது வேறு கட்சியிலோ தனது கட்சியை இணைத்துவிடுவது நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.