ஜெயலலிதா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவேன். மம்தா பானர்ஜி

ஜெயலலிதா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவேன். மம்தா பானர்ஜி
jaya and mamtha
தமிழக முதல்வர் ஜெயலலிதா போலவே ஆட்சியை தக்கவைத்தவர் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. தனக்கு வெற்றியளித்த மக்களுக்கு நன்றி கூறிய மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“திரிணாமூல் தனியாகப் போட்டியிட்டது. எங்களுக்கு எதிராக அனைத்து சக்திகளும் செயல்பட்ட போதும், தேர்தலின் போது பயங்கரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

இத்தகைய அபரிமிதமான ஆதரவுக்காக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒன்றே ஒன்றைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன், அரசியலில் லஷ்மண ரேகை அவசியம். மக்களைத் திசைதிருப்பும் முயற்சிகள், எதிர்க்கட்சிகளிடமிருந்து வேண்டத்தகாத பல விஷயங்கள் என் காதுகளுக்கு வருவது குறித்து வெட்கப்படுகிறேன். இத்தகைய அரசியல் ஜனநாயகத்திற்கு ஒவ்வாதது.

கடந்த 5 ஆண்டுகளில் எங்களது குறிக்கோள் வளர்ச்சி என்பதாகவே இருந்தது.

அனைவரும் என்னிடம் நான் ஏன் புன்னகைக்கவில்லை என்கிறார்கள். மக்களது புன்னகையே என் புன்னகை. தேர்தலின் போது எங்கள் கட்சியினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சொல்லொணா பிரச்சினைகளை எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு அளிக்கப்பட்டது. போலீஸ் துறையின் மீறல்கள் அதிகம்.

பவானிபூரில் பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நான் தேர்தல் ஆணையத்தை இதற்காக குறை கூற மாட்டேன். போலீஸ்தான் காரணம். தேர்தலின் போது அரசியல் அதன் மோசமான உச்சத்தை எட்டியது. ஆகவே எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக் கொள்வது நல்லது. நான் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறேன்.

அடித்தட்டு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை என்றும் எனினும் எனது நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக தேசிய அளவில் ஒரு படைத் தளபதியாக செயல்படவுள்ளதாகவும் கூறினார்..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் தனது நண்பர்கள் என்றும் அவர்களோடு இணைந்து செயல்படவுள்ளதாகவும் மம்தா மேலும் கூறினார்.

Leave a Reply