கேரளாவின் புதிய முதல்வராகிறார் பினராயி விஜயன். அச்சுதானந்தன் அதிருப்தி
நடைபெற்று முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி இடதுசாரிகள் ஆட்சியை பிடித்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநில புதிய முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இந்த தேர்தலில் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல்வர் உம்மன் சாண்டி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் சதாசிவத்திடம் நேற்று அளித்தார்.
இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தேசியச் செயலர் பிரகாஷ் காரத் முன்னிலையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவினர் நேற்று மாலை கூடியது. இந்த கூட்டத்தில், கேரள சட்டப்பேரவைக்கு இடதுசாரி கூட்டணி சார்பில் பினராயி விஜயன் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பினராயி விஜயன் தேர்வுக்கு அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்த முடிவால் அதிருப்தி அடைந்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பினராயி விஜயன், அச்சுதானந்தன் அமைச்சரையில் அமைச்சராகவும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.