விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் மீண்டும் திரும்பி வரும் தொழில்நுட்பம். இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
பொதுவாக விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழும் வகையில்தான் இதுவரை ராக்கெட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த ராக்கெட்டுக்கள் கடலில் விழுந்து வீணாகாமல் மீண்டும் திரும்பி வரும் வகையிலான தொழில்நுட்பத்தை முதல்முறையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை கண்டுபிடித்தது.
இந்நிலையில், இதேபோல் மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது. இது, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இதற்காக ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ, இன்று காலை அந்த ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த வெற்றி இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது. .
ரூ.95 கோடியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ராக்கெட் 17 மீட்ட நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது. 70 கி.மீ. விண்ணில் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் திறன் கொண்டது
இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”ஆர்.எல்.வி டிடி ராக்கெட் தற்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு, செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும்.
அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த வகை ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவில் முதன் முறையாக இந்திய விஞ்ஞானிகளின் 5 வருட முயற்சியில் தயாரிக்கப்பட்டது. இது 70 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பும். இந்த ராக்கெட் பூமியை வந்தடைந்த பிறகு அதனுடைய ஆய்வு தொடர்ந்து நடைபெறும்” என்றார்