அமெரிக்க அதிபர் ஆவேன். 12 வயதில் 3 பட்டங்கள் பெற்ற இந்திய சிறுவன் பேட்டி
அமெரிக்காவில் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்த இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே டாக்டராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
பிறக்கும் போதே அபாரமான திறமையுடனும், அதிபுத்திசாலியாகவும் விளங்குபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த ஒருசிலரில் அமெரிக்கா வாழ் இந்திய சிறுவனும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சக்ரமென்டோவில் வசித்து வரும் தனிஷ்க் ஆபிரகாம் என்ற 12 வயது சிறுவன் தனது பெற்றோர் பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார்.
தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருக்கும் போதே ஜீனியஸாக இருந்ததால் அவனது பெற்றோர், அமெரிக்காவில் உள்ள ‘மென்சா’வில் 4 வயதிலேயே அவனை சேர்த்து விட்டனர். மேலும் இந்த சிறுவன் 7 வயதிலேயே பள்ளிக்கல்வியை முடித்துவிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு அதாவது தனது 10-வது வயதில் மாநில தேர்வு எழுதி உயர்நிலைப்பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று சாதனை செய்தான்.
பின்னர் அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடங்களில் பட்டம் பெற்று சாதனை படைத்ததோடு 11 வயதிலேயே பட்டதாரி ஆனான். இவனுடைய அபார சாதனையை கேள்விப்பட்ட அதிபர் ஒபாமா இச்சிறுவனுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான். அவனுக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் மற்றும் சாந்தா குரூஸ் கிளைகளில் சேர்ந்து படிக்க அழைப்பு வந்துள்ளது. இதில் ஏதாவது ஒரு கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிபிசி சக்ரமென்டோ தொலைக்காட்சி நிறுவனம் தனிஷ்க் ஆபிரகாமை பேட்டி கண்டது. அந்த பேட்டியில் தனிஷ்க் கூறியதாவது: ‘என்னுடைய 18-வது வயதில் நான் எம்.டி. (மருத்துவம்) படிப்பை நிறைவு செய்து டாக்டராவேன் என நினைக்கிறேன். நானும் சாதாரண குழந்தைகளை போலத்தான் வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவேன். ஆனால் எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவேன். நான் சிறுவன் என்பதால் கல்லூரியில் நிறைய பேராசிரியர்கள் என்னை தங்கள் வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக விரும்புகிறேன்’ என்று கூறினான்.