தேர்தல் முகம்: வாகை சூடிய பெண் சக்தி!
முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு மறுபடியும் பூங்கொத்து கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்! சென்னை, கடலூர் பெருவெள்ளத்தில் அதிமுக அரசின் செயலின்மை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்த சூழல். அது மட்டுமல்லாமல், செயல்படாத அரசு, மக்களைச் சந்திக்காத முதல்வர் என்ற விமர்சனங்களும் ஜெயலலிதா மீதும் அவர் அரசு மீதும் வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களையும் எல்லாக் கருத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி மறுபடியும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் ஜெயலலிதா!
அரசியல் கனவு
திரையுலகில் நுழைந்தபோதே எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவருக்குக் கதாநாயகியானார் ஜெயலலிதா. தொடர்ந்து எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்ததில் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனதில் ஜெயலலிதாவுக்கும் ஒரு இடம் கிடைத்தது. திமுகவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி, 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். எம்.ஜி.ஆரின் இந்த அரசியல் வெற்றி ஜெயலலிதா மனதிலும் சவால் வேட்கையை விதைக்க 1982-ல் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆளுமையையும் ஆங்கிலம் பேசும் புலமையையும் கண்டு 1984-ல் ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினராக்கினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு இரண் டாகப் பிரிந்தது அதிமுக. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. 1988-ல் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனாலும், அவரது அரசு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் அமலானது. கொஞ்சக் காலத்தில் அதிமுக முழுவதும் ஜெயலலிதா தலைமையை ஒன்றுபட்டு ஏற்றது. 1989-ல் ஜெயலலிதாவின் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் சட்டமன்றத்தில் திமுகவினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் விதத்தில் ஜெயலலிதா துடிப்புடன் செயல்பட்டார்.
1991-ல் திமுக அரசு கலைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த தருணத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட, அந்தத் தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு! அந்த வரலாற்றின் தொடர்ச்சிதான் 2001 தேர்தல், 2011 தேர்தல், அதற்கு அடுத்து சட்டமன்றத்துக்கு நடந்த தற்போதைய தேர்தல் ஆகியவற்றில் பெற்ற வெற்றிகள்!
தாக்குப் பிடிக்கும் ஆளுமை
எம்.ஜி.ஆர். வளர்த்து விட்டதால்தான் ஜெயலலிதாவால் அரசியலுக்குள் நீடித்து நிற்க முடிகிறது என்ற கருத்து உலவிக்கொண்டிருக்கிறது. அதில் சிறிதளவுதான் உண்மை. தொடக்கம் எம்.ஜி.ஆர். தந்ததென்றாலும் தனக்கென ஓர் ஆளுமை இல்லையென்றால் ஜெயலலிதாவால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. எல்லாத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த சூழலில் அரசியல் ஆண்மையின் அகங்காரத்தைத் தொடர்ந்து வீழ்த்திவருவது ஜெயலலிதாவின் மிகப் பெரிய சாதனை.
எம்.ஜி.ஆரின் கடுமையான போட்டியாளராக இருந்த ராஜதந்திரியான கருணாநிதியை எதிர்த்து நின்று, வெற்றி பெற்று, நீடிப்பதற்கு எம்.ஜி.ஆர் என்ற பின்னணி மட்டும் போதுமானதல்ல. அசாத்தியமான நெஞ்சுறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படிப்பட்ட நெஞ்சுறுதியும் தன்னம்பிக்கையும் தன்னிடம் அதிகம் இருக்கிறது என்பதை எத்தனையோ சவால்கள், தோல்விகள் போன்றவற்றுக்குப் பிறகும் ஜெயலலிதா நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன என்று ஒருமுறை கனிமொழியிடம் கேட்டபோது, ‘துணிச்சல்’ என்று அவர் பதிலளித்தார். அது முற்றிலும் உண்மை!
பெண்களின் பிரதிநிதி
எம்.ஜி.ஆர். என்ற பெயருக்குத் தாய்மார்கள் மத்தியில் இன்றும் ஈர்ப்பு இருக்கிறது. அதைப் போல ஜெயலலிதா மீதும் ஒரு ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. ஒரு பெண் போராடி அதிகாரம் பெறுவது என்பது காலங்காலமாக அடக்கப்பட்ட பெண்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் விஷயம். அதனால்தான் ஜெயலலிதாவைத் தங்கள் பிரதிநிதி என்றே பெரும்பாலான தாய்மார்கள் கருதுகிறார்கள்.
அவரது கொள்கை, செயல்பாடு போன்றவற்றைப் பற்றி ஏதும் தெரியவில்லை என்றாலும் ‘அவரும் நம்மைப் போல ஒரு பெண்’ என்ற உணர்வே ஜெயலலிதாவை அவர்கள் தங்களுடையவராகக் கருதுவதற்கு முதன்மையான காரணம்.
கடந்த கால ஆட்சி செயல்பாடுகள், அவர் மீதுள்ள கடும் விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி, பெண் சக்தியின் ஒரு ‘அடையாளம்’ என்ற நிலையையும் கடந்து நடைமுறையில் பெண் சக்திக்காக இந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அவர் செய்வார் என்ற நம்பிக்கையில்தான் தாய்மார்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் தற்போது இருப்பதெல்லாம் ஒரு கேள்விதான்: ‘செய்வீர்களா?’