100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்.
தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா முதல் நாளில் அறிவித்த திட்டங்களில் ஒன்று 100 யூனிட் மின்சாரம் இலவசம். இந்த உத்தரவில் முதல்வர் கையெழுத்திட்டுள்ள போதிலும் ஒருசில ஊடகங்கள் இதுகுறித்து பல்வேறு விதமான சந்தேகங்களை கிளப்பி வருகின்றது. 100 யூனிட்டுகள் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் 100 யூனிட்டுக்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இலவசம் கிடையாது என்றும் வதந்தியை பரப்பி வரும் நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்குக் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயவுசெய்து இந்த செய்தியையும் படியுங்கள்: 100 யூனிட் இலவச மின்சாரம் யார் யாருக்கு பொருந்தும். மின்வாரிய அதிகாரிகள் தகவல்