மினரல் வாட்டர், குளிர்பான பாட்டில்களுக்கு தடை. சிக்கிம் அரசு அதிரடி
இந்தியாவின் சுற்றுசூழலுக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகள்தான். மக்காத இந்த பிளாஸ்டிக் குப்பைகளால் இந்தியாவே பிளாஸ்டி குப்பை நாடாக மாறி வரும் நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதுகுறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் சிக்கிம் அரசு அதிரடியாக செயலில் இறங்கியுள்ளது.
அரசு மற்றும் அரசு சார்ந்த எந்த விழாக்களிலும் மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது என்று சிக்கிம் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி நுரையூட்டப்பெற்ற பானங்கள் அடங்கிய பாட்டில்களுக்கும் அந்த தடையை விதித்திருக்கிறது. அரசின் இந்த உத்தரவை சிக்கிம் மாநில மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இதனால், எதிர்காலத்தில் குப்பைக்கூளங்கள் குறைக்கப்பட்டு சுகாதாரம் பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
குப்பைக்கூளங்கள் பஜார்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிக்கிம் அரசு, பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களில் இருந்து நாம் அன்றாட தேவைக்கான, ஸ்பூன், பிளேட்ஸ், கண்டெயினர்கள் போன்ற பொருட்களையும் உடனடியாக தயாரிக்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டுள்ளது.
சிக்கிம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரேம் தாஸ் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “‘நாம்தான் இந்தியாவிலேயே பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் முன்னோடி மாநிலமாக திகழப் போகிறோம். வெளிநாடுகளில் இருந்து மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள்தான் சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்துகிறது. இதற்கும் தடைவிதிக்க உத்தரவிட்டுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
இனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்