தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் தேதி. தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் தேதி. தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம்
tanjore
தேர்தலின்போது பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ஜூன் 1ஆம் தேதிக்குள் இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தி வெற்றி பெறும் இருவரையும் மாநிலங்களவை எம்பி தேர்தலில் ஓட்டளிக்க வழிவகை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக ஆளுநர் ரோசய்யா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கவர்னர் ரோசய்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: அரவக்குறிச்சி சட்டமன்றத்  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியும், தஞ்சாவூர் சட்டமன்றத்  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ரங்கசாமியும் கடந்த 22 ம் தேதியன்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். மேற்கண்ட இரண்டு தொகுதிகளின் தேர்தலை ஆளுநரின் அனுமதியின்றி தேர்தல் ஆணையம் தள்ளி வைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.

பண பட்டுவாடா புகாரை நீதிமன்றத்தில்தான்  தீர்மானிக்க வேண்டும் என்றும், அதற்காக தேர்தலை தள்ளிவைத்தால், தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் குறைந்து விடும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கடந்த 23ம் தேதியன்று அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார். மறுநாள் (24 ம்தேதி) தலைமை தேர்தல் ஆணையத்தின்  அறிக்கையை ஆளுநரிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிமுறைகள், அரசியல் சட்டம், முந்தைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம்  அளித்த தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் கோரிக்கை மனுக்களையும், தலைமை தேர்தல் ஆணையத்தின் விரிவான அறிக்கையையும் ஆளுநர் ஆய்வு செய்தார்.

மேற்கண்ட 2 தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளிவைத்ததன் மூலம், அத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்கள், நடைபெற உள்ள டெல்லி மாநிலங்களவை  தேர்தலில் ஓட்டுபோடும் சட்டப்பூர்வ உரிமையை இழக்க வேண்டி இருக்கும் என்ற உண்மையையும் கருத்தில் கொண்டார்.

அதன் அடிப்படையில், பொது நலன் மற்றும் அனைத்து தரப்பினரின் நலன் கருதி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலை கூடிய விரைவில், குறிப்பாக ஜூன் 1ம் தேதிக்கு முன்பே நடத்துமாறு பரிந்துரை  செய்து தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் இன்று (26.05.2016) கடிதம் எழுதி உள்ளார்

Leave a Reply