ஆளுனரா? அதிமுக அபிமானியா? ராம்தாஸ் காட்டமான அறிக்கை
தமிழக ஆளுனர் ரோசைய்யா தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல் தேதி குறித்து இன்று காலை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஆளுனரின் இந்த கடிதம் குறித்து பாமக நிறுவனர் ராம்தாஸ் ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் கடந்த 22-ஆம் தேதி ஆளுனரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது,‘‘இரு தொகுதிகளின் தேர்தல் ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாற்றுக்களை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். அதற்காக தேர்தலை ஒத்திவைத்தால் அத்தொகுதிகளில் வெற்றி பெறும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் குறைந்து விடும். எனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை உடனடியாக நடத்த ஆணையிட வேண்டும்’’ என்று மனு அளித்துள்ளனர்.
ஆளுனர் அடுத்த நாளே தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை அழைத்து இதுகுறித்து விசாரித்துள் ளார். இதுதொடர்பான தேர்தல் ஆணையத்தின் விளக்க அறிக்கையை 24-ஆம் தேதி ஆளுனர் ரோசய்யா விடம் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த ஆளுனர், ‘‘இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அத்தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுவார்கள். எனவே அனைவரின் நலன் கருதி இரு தொகுதிகளிலும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவும், முடிந்தால் ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்பாகவும் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதன்மூலம் ஆளுனர் என்பதைத் தாண்டி அதிமுகவின் விசுவாசி என்பதை அவர் நிரூபித்துள்ளார். தேர்தல் நடைமுறையில் இதுவரை எந்த ஆளுனரும் இவ்வளவு வெளிப்படையாக குறுக்கிட்டதில்லை. தேர்தல் நடைமுறையில் ஆளுனர் ஒரு கருவி தானே தவிர, அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.
ஒருவேளை, ஆளுனருக்கு அத்தகைய அதிகாரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அவரது செயல்பாடு ஒருதலைப்பட்சமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. இரு தொகுதிகளிலும் எந்த தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கலந்து பேசி முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அரவக்குறிச்சி பா.ம.க.வேட்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்த இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் இச்சிக்கலில் ஆளுனர் தலையிடுவது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும்? அப்படியே இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த விஷயத்தில் தலையிட்டதாக வைத்துக் கொண்டாலும், 2 தொகுதிகளிலும் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும் அழைத்து பேசி, கருத்து கேட்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், ஆளுனர் அவ்வாறு செய்யத் தவறியதன் மர்மம் விளங்கவில்லை.
இரு தொகுதி தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால், அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாநிலங்களவைத் தேர்தல் வாக்குரிமை பறிபோகும் என்ற ஆளுனரின் வாதத்தை ஏற்கவே முடியாது. இரு தொகுதிகளில் எந்த கட்சி வென்றாலும் அது மாநிலங்களவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதையும் தாண்டி ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது முக்கியமா… இரு உறுப்பினர்களின் மாநிலங்களவைத் தேர்தல் வாக்குரிமை முக்கியமா என்று கேட்டால் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதே முதன்மையானதாகும்.
இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதன் மூலம் அதிமுகவின் குரலாக மாறி ஜனநாயகப் படுகொலைக்கு துணை போயிருக்கிறார் ஆளுனர் ரோசய்யா.
இப்படிப்பட்டவர் தமிழகத்தின் ஆளுனராக தொடர்ந்தால், அது ஜனநாயகப் படுகொலைகள் தொடரவே வழி வகுக்கும். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லை என்று ஒரு காலத்தில் தி.மு.க. எழுப்பிய முழக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் தான் ஆளுனரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
அதேபோல், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாக செயல்படும் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி தேர்தல் நடைமுறை முடிவடையும் முன் ஆளுனரை சந்தித்ததும், விளக்க அறிக்கை தாக்கல் செய்ததும் தவறு. எனவே, தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற ஆளுனரின் பரிந்துரையை ஆணையம் ஏற்கக்கூடாது.
இவ்வாறு டாக்டர் ராம்தாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் தேதி. தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம்