வளர்சிதை மாற்றத்தை தூண்டும் 6 உணவுகள்
உடலின் ஆரோக்கியத்துக்காக இயல்பாக நடைபெறும் ரசாயன மாற்றங்களை வளர்சிதை மாற்றம் என்கிறோம். இதில் முக்கியமானது, நாம் சாப்பிடும் உணவு, ஆற்றலாக மாற்றப்படுவது. வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் ஆறு உணவுகள் இங்கே…
முட்டையின் வெள்ளைப் பகுதி
முட்டையின் வெள்ளைப் பகுதியில், கிளைகளுடன்கூடிய சங்கிலி போன்று அமினோஅமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் புரதம் மற்றும் வைட்டமின் டி உள்ளன.
கொழுப்புக் குறைவான இறைச்சி
நம் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். அதிலும், குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிப்பிடலாம். குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சி வகைகளில் இரும்புச்சத்து உள்ளது. இதை எடுத்துக்கொள்ளலாம்.
பருப்பு வகைகள்
தினமும் ஒரு கப் பருப்பு சாப்பிட்டுவந்தால், 35 சதவிகிதம் இரும்புச்சத்து கிடைக்கும். அதேபோல கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது.
தண்ணீர்
உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.
மிளகு
மிளகாய் மற்றும் மிளகில் இருக்கும் கேப்சாய்சின் எனப்படும் வேதிப்பொருள் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிக அளவில் தூண்டும். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு மிளகாயோ, மிளகோ உணவில் சேர்த்துவருதல் நல்லது.
முழு தானியங்கள்
சோளம், திணை, பார்லி, ஓட்ஸ், கோதுமை, அரிசி, வரகு, சாமை போன்றவற்றில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால் உடலின் இயக்கங்கள் தூண்டப்படும்.