கருப்பினர்களை காயப்படுத்தும் விளம்பரம். மன்னிப்பு கேட்டது சீன நிறுவனம்
சலவைத்தூள் தயாரிக்கும் சீன நிறுவனம் ஒன்றின் விளம்பரம் கருப்பினர்களை காயப்படுத்தும் வகையில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் அந்த விளம்பரத்தை இனி பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதி கூறியுள்ளது.
சீனாவை சேர்ந்த கியோபி என்ற சலவைத் தூள் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் தயாரித்த ஒரு விளம்பரத்தில் கறுப்பின ஆண் ஒருவரது தலை முதலாக சலவை இயந்திரத்துக்குள் திணிக்கப்பட்டு, சலவை இயந்திரம் இயங்கிய பின், வெள்ளை நிற ஆசியராக வெளியே வருவது போல் சித்தரித்திருந்தது. இந்த விளம்பரம் கருப்பினத்தவர்களை காயப்படுத்துவதாகவும் இதற்காக உடனடியாக அந்நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வெளிநாட்டு விமர்சகர்கள் அதிகளவில் உணர்ச்சிகரமாக கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கியோபி நிறுவனம் உடனடியாக இந்த விளம்பரத்திற்கு தடை செய்வதாகவும், இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் தயாரிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் விமர்சகர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.