அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றார் கருணாஸ்

அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றார் கருணாஸ்
karunas
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர பல பெரிய கட்சிகளுக்கே வாய்ப்பு கிடைக்காத நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு ஒரு தொகுதி கிடைத்தது. இந்நிலையில் தற்போது வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக மாறியுள்ள கருணாஸ் தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் கருத்து கூறும்போது, “ராமதாஸ், திருமாவளவன், சரத்குமார் ஆகியோர் எந்தப் பின்னணியில் அரசியல் கட்சிகளை நடத்துகிறார்கள் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் பொதுத்தளத்தில் அரசியல் செய்ய எந்தத் தடங்கலும் இல்லை. ஆனால், எங்களுக்கு ஒரு சுவரொட்டி ஒட்டுவதில் கூட சிக்கல் இருக்கிறது.

ஏழு ஆண்டுகளாக அமைப்பு நடத்தும் நான் எந்த சமுதாயத்துக்கும் எதிராக இதுவரை கருத்துத் தெரிவித்தது இல்லை. எனக்குத் தெரிந்தது தமிழினம், தமிழ் மொழி இந்த இரண்டும் தான். எனது நண்பர்களில் பலபேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். எனது சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஜாதி – மதம் பார்க்காமல் 153 பேரை பட்டதாரிகளாக்கி இருக்கிறேன். இருந்தாலும் என்னை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளம் கொண்டு பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

தேர்தல் சமயத்தில் ஆறு கட்சிகளின் கொடிகளையும் எனது காரில் கட்டி இருந்தேன். ஆனால், எங்களது அமைப்பின் கொடியை மட்டும் கட்டக்கூடாது என சிலர் பிரச்சினை செய்தார்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்யாதபோது எதற்காக இந்த நிபந்தனை? இதற்குக் காரணம் நாங்கள் அரசியல் கட்சியாக இல்லாமல் தனிப்பட்ட ஒரு அமைப்பாக இருப்பதுதான். எனவேதான் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக மாற்ற முடிவெடுத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவானவனாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். எனவே தமிழகத்தில் இன்னுமொரு அரசியல் கட்சி விரைவில் உதயமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: Karunas will be start a political party

Leave a Reply