பத்திரப் பதிவு செலவைப் பக்காவாக மதிப்பிடுங்கள்!

பத்திரப் பதிவு செலவைப் பக்காவாக மதிப்பிடுங்கள்!

document_2872246fவீடு, மனை வாங்குபவர்களுக்கு எப்பவும் தீராத ஒரு சந்தேகம் இருக்கும். அது, பத்திரப்பதிவுக்கு எவ்வளவு செலவாகும் என்பதுதான். வீடு, மனை வாங்குவதில் உள்ள சிக்கல்களைக்கூட எளிதில் அறிந்து தீர்த்துக்கொள்வார்கள்.

ஆனால், பத்திரப் பதிவு செய்து முடிக்கும் வரை செலவாகும் தொகை குறித்த சந்தேகம் பலருக்கும் தீரவே தீராது. இந்த விஷயத்தில் படித்தவர்கள்கூடத் தடுமாறுவார்கள். பத்திரவுப் பதிவுக்கு ஆகும் செலவு, எவ்வாறு பத்திரச் செலவு மதிப்பிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

பத்திரப் பதிவு ஆவணத்தை விற்பனை ஆவணம் (Sale Deed) என்று சொல்வார்கள். அந்தச் சொத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்பத்தான் பத்திரப் பதிவுக்கான கட்டணம் செலவாகும். அரசு வழிகாட்டி மதிப்பின்படிதான் அது நிர்ணயம் செய்யப்படும்.

சொத்தின் மதிப்பில் 7 சதவீதம் முத்திரைக் கட்டணமாகவும், 1 சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் வசூலிப்பார்கள். முன்பு மனையின் மதிப்புக்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டு களாக மனையின் மதிப்பு மட்டும் அல்லாமல் கட்டிடத்தின் மதிப்பையும் சேர்த்துதான் 7 சதவீதம் முத்திரைக் கட்டணத் துக்காக வசூலிக்கப்படுகிறது.

தனி வீடு என்றால் மனையின் மதிப்பு மற்றும் கட்டிடத்தின் மதிப்பையும் தனித்தனியாக மதிப்பிடுவது சுலபம. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது எப்படிப் பத்திரப் பதிவுக்குச் செலவாகும்? அடுக்குமாடி வீடு என்கிறபோது யு.டி.எஸ். எனப்படும் பிரிக்கப்படாத மனையின் பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்துக்கும் செலவாகும்.

உதாரணமாக 600 சதுர அடியில் அடுக்குமாடி வீடு வாங்கும்போது பிரிக்கப்படாத மனையின் பாகமாக சுமார் 300 சதுர அடி மனை வீடு வாங்குபவருக்கு ஒதுக்கப்படும். இந்த 300 சதுர அடிக்கு அரசு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீதம் முத்திரைக் கட்டணமாகவும், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

இதேபோல கட்டுமான ஒப்பந்தம் என்பது கட்டிடம் கட்ட ஆகும் சொத்தச் செலவில் ஒரு சதவீதமும், அதைப் பதிவு செய்வதற்கு ஒரு சதவீதமும் செலவு ஆகும்.

இப்போது ஒரு சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். பழைய வீடு என்றால் பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும் என்று கேள்வி எழும். பழைய வீடு என்றால் பொதுப்பணித்துறை செய்துள்ள மதிப்பீட்டின்படி வீட்டுக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படும். அந்த மதிப்பில் 7 சதவீதம் முத்திரைக் கட்டணமாகவும், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் செலவாகும்.

தனி வீட்டுக்கு மட்டுமல்ல அடுக்குமாடி வீட்டுக்கும் இதே முறைதான். புதிய அடுக்குமாடி என்றால் யுடிஎஸ்-க்கு அரசு வழிகாட்டு மதிப்பின்படி 7 சதவீதமும், கட்டுமான ஒப்பந்தத்துக்கு 2 சதவீதம் எனத் தனித்தனியாகப் பதிவு செலவாகும் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? ஆனால், பழைய அடுக்குமாடி என்றால் வீட்டின் மொத்தமாக எவ்வளவு மதிப்போ, அந்த மதிப்பில் 7 சதவீதம் முத்திரைக் கட்டணமாகவும், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் செலவாகும்.

பத்திரப்பதிவு செய்ய ஆயத்தம் ஆகும்போது பலருக்கும் இன்னொரு சந்தேகம் வரும். அரசு வழிகாட்டு மதிப்புக்கு ஆவணத்தைப் பதிவு செய்வதா அல்லது சந்தை மதிப்புக்குப் பதிவு செய்வதா எனக் குழப்பம் ஏற்படும். அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை தவறான வழிகாட்டுதல் மூலம் செலவைக் குறைப்பதாக நினைத்துக்கொண்டு, குறைந்த மதிப்புக்கு ஆவணத்தைப் பதிவு செய்தால் சார்பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்புத் துணை மாவட்ட ஆ ட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். அந்தச் சொத்தின் சந்தை உண்மையான சந்தை மதிப்பை அறியும்படி அதில் குறிப்பு எழுதி அனுப்பி வைத்துவிடுவார்.

அதன்படி, சந்தை மதிப்பு பற்றி ஆய்வு செய்வார்கள். அந்த ஆய்வில், சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் கண்டறியும் மதிப்பும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பும் ஒன்றாக இருந்தால், ஆவணத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பைவிட அதிகமாக இருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? கூடுதல் மதிப்புக்கு முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணத்தைத் தனியே செலுத்தச் சொல்லிவிடுவார்கள்.

Leave a Reply