அன்னம் போல் மிதக்கும் இல்லம்

அன்னம் போல் மிதக்கும் இல்லம்

2வீட்டைச் சுற்றித் தண்ணீர் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்? வீட்டை விட்டு வெளியே பால்கனியில் வந்து நிற்கும்போது கண்ணுக்கெதிரே நீர்ப்பரப்பு தெரியும்போது அந்தக் குளுமைக்கு ஈடேது? இப்படியான வீடு பற்றிய ஏக்கம் கோடைக் காலத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

கோடை வெயிலின் வெம்மை வாட்டி எடுக்கும்போதெல்லாம் வீடானது இப்படித் தண்ணீருக்கு நடுவிலே அமைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நமக்கு. ஏனெனில் கோடைக் காலத்தில் வீட்டுக்குள் வெக்கை தாளமுடியாது.

மின்விசிறியின் காற்று சூடாகப் பரவும். அதுவும் இல்லையென்றாலோ வியர்வை வழிய வழிய இருக்கும் நிலை ஏற்படும். ஆகவே தண்ணீருக்காக மனம் ஏங்கும்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் இருந்தால் எப்படி இருக்கும் என மனம் கற்பனையில் மிதக்கும். எப்போதாவது கேரளத்தின் படகு வீடுகளில் ஓரிரு நாள்கள் தங்கி இந்தக் கற்பனைக்கு உயிரூட்டிக்கொள்வதில் ஒரு திருப்தி நமக்கு.

ஆனால் நெதர்லாந்தில் பெரும்பாலான வீடுகளை இப்படி நீர் நிலைகளில் அமைக்கும் சூழலே நிலவுகிறது. இந்நாட்டின் ஆம்ஸ்டெர்டேமின் புறநகர்ப் பகுதியான இஜ்பர்க்கில் இப்படியான மிதக்கும் வீடுகளே அதிகம்.

இங்கே இருக்கும் இஜ்மீர் ஏரியின் மீது தீவுகளைப் போன்று வீடுகள் தனித் தனித் தொகுதிகளாகவும், தனி வீடுகளாகவும் அமைக்கப்படுகின்றன. நெதர்லாந்தில் வசிப்போரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கடல்மட்டத்தைவிடக் குறைந்த மட்டத்தில் வீடு கட்டி வசித்துவருகின்றனர்.

நீர்நிலைகளின் மேலே அமைக்கப்படும் இந்த மிதக்கும் வீடுகளை உருவாக்க ஆகும் கட்டுமானச் செலவு வழக்கமான மரபான வீடுகளை அமைப்பதைவிடக் குறைவு என்கிறார்கள்.

வீடுகளை உருவாக்கப் போதுமான நிலம் கிடைக்காத அளவுக்கு மிகவும் அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களுக்கு இந்த மிதக்கும் வீடுகள் வரப்பிரசாதமாக உள்ளன.

இந்த மிதக்கும் வீடுகளைக் கட்டிய கட்டுமான நிறுவனம் மர்லிஸ் ரோமெர் வீடுகளை ஒரு கப்பல் கட்டுமானத் தளத்தில் வைத்துக் கட்டியிருக்கிறது. வழக்கமாக நிலத்தில் வீடுகட்டுவதைவிட மிக விரைவாக இந்த வீடுகளைக் கட்டும் பணிகள் நிறைவேறியிருக்கின்றன. கப்பல்களின் கண்டெயினர்களின் கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வீடுகள் உருவாக்கப்படுகின்றன என்கிறது இந்த வீடுகளை நிர்மானித்த கட்டுமான நிறுவனமான மர்லிஸ் ரோமெர்.

வீடுகட்டும் பணிகள் முற்றிலும் நிறைவுற்ற பின்னர் அவை படகுகள் மூலம் நீர் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளில் இரண்டு மூன்று தளங்கள்வரை உள்ளன.

நீரின் மேலே தள்ளாடாமல் இருக்கும் வகையான மிதக்கும் தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வீடு நிலையாக இருக்க வைக்கப்படுகிறது. மொத்த வீடும் கான்கிரீட் டேங்குகளின் மேலே இருத்திவைக்கப்படுகின்றன.

நிலத்தில் அமைக்கப்படும் வீடுகளில் என்னென்ன அறைகள் கட்டப்படுமோ அவை எல்லாமே இந்த மிதக்கும் வீடுகளிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கூடுமானவரை மரம், கண்ணாடி, எடை குறைந்த ஸ்டீல் போன்றவற்றைப் பயன்படுத்தியே வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

படுக்கையறையும் குளியலறையும் அடித்தளத்தில் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் உள்ளன. நில மட்டத்தில் உள்ள தளத்தில் சமையலறையும் உணவு உண்ணும் அறையும் அமைக்கப்படுகின்றன.

இந்த அறையை ஒட்டி வெளிப்புறத்தைப் பார்க்கும் வகையிலான பால்கனி போன்ற திறந்தவெளி அமைப்பு உள்ளது. இதில் மாலை வேளைகளில் அமர்ந்து நீர் நிலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். வீட்டின் வரவேற்பறையானது மேல் தளத்தில் அமைக்கப்படுகிறது.

Leave a Reply