வணிக நூலகம்: சிறிய செயல் பெரிய மாற்றம்!
சிறு சிறு மழைத்துளிகள் பெரும் வெள்ள மாய் மாறுவதைப் போல, வாழ்க்கைக் கான பெரும் மாற்றங்கள் நம்முடைய சிறிய செயல்பாடுகளின் மூலமே உருவாக்கப் படுகின்றன. சிறு கேள்விகளைக் கேட்பது, சிறிய எண்ணங்களை ஏற்படுத்துவது, சிறிய செயல்பாடுகளை மேற்கொள்வது மற்றும் சிறிய சிக்கல்களை தீர்ப்பது போன்ற செயல் களே, வரவிருக்கும் பெரியதொரு மாற்றத் திற்கு அடித்தளமாக அமைகின்றன என்கிறார் “ஒன் ஸ்மால் ஸ்டெப் கேன் சேஞ்ச் யுவர் லைப்” என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர்.
செயல்பாடுகளை சிறியதாய் தொடங்கும்போது, நம்முடைய நோக்கம் அல்லது இலக்கு என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. உடல் எடை குறைப்பு, புகைப் பழக்கத்தை விடுதல், ஒரு நாவலை எழுதுதல், நமக்கான உடற்பயிற்சியினை ஆரம்பித்தல் போன்ற எந்தவொரு நோக்கத்தினையும் சிறியதாய் தொடங்கி எளிதாக எட்டிப்பிடிக்கலாம் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது. மேலும், இதற்கான வழிமுறைகளை கெய்சன் என்னும் புகழ்பெற்ற தத்துவ முறையின் வாயிலாக விவரித்துள்ளார்.
மாற்றம் கடினமே!
மாற்றங்களை பொதுவாக மிகப்பெரிய மலையேற்றம் போலவே பார்த்து பழகிவிட்டது நம் மனது. அதனாலேயே, வாழ்க்கைக்கு அத்தியா வசியமான மிகச்சிறிய மாற்றங்கள் கூட பெரியதாய் தோன்றுகிறது.
மாற்றத்துக்கான இருபத்தைந்து சதவீத தீர்மானங்கள் நான்கு மாத காலத் திற்குள்ளாகவே கைவிடப்படுகின்றன. இதிலெல்லாம் தப்பிப் பிழைத்து தீர்மானத்தில் வெற்றிபெறுபவர்கள் கூட, பொதுவாக ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கடந்த பிறகே தங்களது தீர்மானத்தில் வெற்றி அடைகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
சிறிய கேள்விகள்!
நம்முடைய கேள்விகள் மற்றவர் களுக்கானதாக இருக்கும்போது, அது ஒட்டுமொத்த குழுவின் படைப்பு சக்திக்கு வழிவகுக்கிறது. அதுவே நம்முடைய கேள்விகள் நமக்கானதாக இருக்கும்போது, அது மாற்றத்திற்கான தனிப்பட்ட செயல்முறை திட்டத்திற்கு சரியான அடித்தளம் அமைக்கின்றது. நமது மூளைக்கான திட்டங்களுக்கான மிகவும் வலிமைவாய்ந்த வழிகளில் ஒன்று, கெய்சனின் சிறிய கேள்விகளை கேட்கும் உத்தி என்பதை வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர்.
உங்கள் நண்பரிடம், அவரது காரின் அருகில் நிறுத்தப்பட்டுள்ள மற்றறொரு காரின் நிறம் என்ன என்று கேளுங்கள். அவர் உங்களை வேடிக்கையாகப் பார்த்துவிட்டு, பெரும்பாலும் தெரியாது என்றே கூறுவார் அல்லவா! இதே கேள்வியை அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அவரிடம் தொடர்ந்து கேளுங்கள். நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் இதே கேள்வியை அவரிடம் கேட்கும்போது, தகுந்த பதிலுடன் இருப்பதைப் பார்க்க முடியும். ஆம், காரை பார்க் செய்யும்போதே அவரது மூளை, இந்த கேள்வியை ஒருவர் உங்களிடம் கேட்கப்போகிறார் என்றும் அதற்கான பதிலை தயாராக வைத்துக்கொள்ளும்படியும் அவருக்கு அறிவுறுத்திவிடும்.
சிறிய எண்ணங்கள்!
நமது அனைத்து செயல்களுக்கும் எண்ணங்களே அடித்தளமாக அமைகின்றது. மூளையின் சரியான சீரமைப்பிற்கு சிறு சிறு எண்ணங்களும், சிந்தனைகளும் உதவியாக இருப்பதாக சொல்கிறார் ஆசிரியர்.
புகழ்பெற்ற ஒலிம்பிக் நீச்சல் வீர ரான மைக்கேல் பெல்ப்ஸ் பதினெட்டு தங்கப்பதக்கங்கள் உட்பட இருபத்தி இரண்டு பதக்கங்களை பெற்றவர். பெய்ஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது, மன சீரமைப்பு என்ற இந்த முறையை பயிற்சி செய்யுமாறு தனது பயிற்சியாளரால் அறிவுறுத்தப்படுவாராம் பெல்ப்ஸ். அதாவது, போட்டி தொடங்கும் இடம், சமிக்ஞைகளை கேட்பது, நீச்சலை தொடங்குவது உட்பட போட்டிக்கான அனைத்தையும் கற்பனையான காட்சி களாக மனத்திரையில் ஓடவிடுவது. கிட்டத்தட்ட போட்டியை ஒரு வீடியோ கிளிப்பாக பார்ப்பதைப் போன்றது. நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன் இந்த மன ஒத்திகையை தொடர்ந்து செய்து திறன்களை மேம்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கிறார் ஆசிரியர்.
சிறிய செயல்கள்!
உடற்பயிற்சியினை தொடங்க நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறுமனே எழுந்து நில்லுங்கள். ஆம், சிலமணித்துளிகள் நிற்பது என்பது சிறிய செயலே என்றாலும், அதுவே தொடர்ந்து உங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் என்கிறார் ஆசிரியர். புதிதாக ஒரு மொழியை கற்க விரும்பு கிறீர்களா? அப்படியானால், ஒரு நாளைக்கு ஒரு வார்த்தை என்று தொடங் குங்கள். அதுவும் கடினமாக உள்ளதா? அப்படியானால் ஒரு வாரத்திற்கு அதே வார்த்தையை பயிற்சி செய்யுங்கள். அடுத்த வாரம் வேறொரு புதிய வார்த்தைக்கு செல்லுங்கள்.
சிறிய சிக்கல்கள்!
அவ்வப்போது உருவாக்கும் சிறிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்க்கும்போது பின்னாளில் ஏற்படும் வலிமிகுந்த பெரிய சிக்கல் களிலிருந்து விடுபட முடியும் என் கிறார் ஆசிரியர். சிக்கல்கள் சிறியதாய் இருக்கும்போது அதற்கான தீர்வும் எளிதானதாகவே இருக்கும். மேலும், தொடர்ந்து சிறிய பிரச்சனைகளை சரியாக அடையாளம் காணும் நமது பண்பு, எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சனைகளே ஏற்படாத நிலையினை நமக்கு ஏற்படுத்தித்தரும்.
சிறிய வெகுமதிகள்!
உங்களிடமோ அல்லது மற்றவர் களிடமோ நல்ல பழக்கங்களை ஏற் படுத்த விரும்புகிறீர்களா? அதற்கான மிகச்சரியான வழி சிறிய வெகுமதிகளே என்கிறார் ஆசிரியர். மேலும், மாற்றத் திற்கு தேவையான மன சக்தி மற்றும் ஊக்கத்திற்கான தூண்டுகோலாகவும் அமைகின்றது. சிறிய வெகுமதிகள் மற்றும் அங்கீகாரங்கள் தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியினையும், பணியில் சிறந்து விளங்கும் பண்பினையும் ஏற்படுத்துகின்றது.
எண்ணங்களோ அல்லது செயல் களோ எதுவாயினும் இன்றைய சிறிய விதைப்பு நாளைய பெரிய அறுவடை என்பதே இதன்மூலம் நாம் கற்றுக் கொள்ளும் செய்தி.