25 இந்திய மாணவர்கள் வெளியேறுமாறு அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் உள்ள மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் என்ற பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 25 இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேறி இந்தியாவுக்கோ அல்லது வேறு பல்கலைக்கழகத்திற்கோ செல்லுமாறு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் 25 இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணம், பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து வரும் 60 மாணவர்களில் 25 இந்திய மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற முதல் பருவ தேர்வில் பல்கலைக்கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த 25 மாணவர்களையும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் திட்டத்தின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறுகையில், ”முதல் பருவ தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை. ஆனால், இந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் உதவி செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியவில்லை. இது அமெரிக்க இளநிலை பட்டதாரிகளுக்கான படிப்பில் சேர அடிப்படை விதியாகும். இந்த மாணவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியாமல் சென்றால் எனது துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்களை தொடர அனுமதி அளிக்க முடியாமல் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.