நவநதிகள் பாவம் போக்கிய கோயில் குளம்
பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம் (படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்து விட்டால், எப்படித் தனது படைப்புத் தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவர் முறையிட்டார்.
அதற்கு சிவபெருமான் அமுதத்தையும், மண்ணையும் சேர்த்துப் பிசைந்து மாயமாகிய குடத்தைச் செய்து, அதனுள் அமுதத்தை நிரப்பி, அதனுள் சிருஷ்டி பீஜத்தை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறமும் வைத்து, அதில் நிறைய அமுதத்தைச் சேர்த்து, குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றைச் சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்புப் பூஜை செய்து அக்குடத்தை ஓர் உறியில் வைத்து மகாமேரு மலையில் ஓர் இடத்தில் வைக்கும்படிக் கூறினார்.
அதனையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்கப் பிரளயம் உருவாகி, ஏழு கடல்கள் யாவும் ஒன்றாய்க் கலந்து உலகை மூழ்கடித்தன. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது.
மிதந்து வந்த கலசம்
அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய கலசம் சுழன்று, சுழன்று மிதந்து வந்து, திருக்கலயநல்லூர் எனும் இடத்துக்கு வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை, தருப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாகின.
அப்போது சிவபெருமான் வேடனாக வந்து, சற்றுத் தொலைவிலிருந்து அம்பு எய்தி அந்த அமிர்தக் குடத்தை உடைத்தார்.
இறைவன் அருளால் அமுதக் குடத்தில் இருந்த அமுதம் ஆறாய்ப் பெருகி நான்கு திக்கிலும், எட்டுக் கோணமும் ஐந்து குரோச தூரத்துக்குச் சென்றது. கலசத்திலிருந்து கும்பத்தின் வாயில் விழுந்த இடம் குடவாசல் என்று அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட குடவாசலில் அமைந்துள்ளதுதான் கோனேஸ்வரசுவாமி திருக்கோயில். இது 70 மாடக்கோயில்களில் ஒன்றாக, யானை ஏற முடியாத படிகளைக் கொண்ட கோயிலாக அமைந்துள்ளது. கோயில் எதிரே அமிர்தபுஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது.
இந்தக் கோயில் கோச்சுங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். காவிரி, கங்கை, நர்மதா, கோதாவரி உள்ளிட்ட ஒன்பது நவநதிகளும் தங்கள் பாவங்களை போக்குவதற்கு இங்குள்ள குளத்தில் தான் முதலில் நீராடிவிட்டு, பின்னர் சாக்கோட்டை அமிர்த கலசநாதர் கோயில் கலயதீர்த்த குளத்தில் நீராடி அதன் பிறகு மகாமகக் குளத்தில் நீராடியதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கும்பகோணம் அருகே அமைந்துள்ள குடவாசல் கோனேஸ்வரசுவாமி கோயில் திருக்குளத்தில் நீராடி வழிபட்டால் கவலைகள் தீரும், செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.