ஜூன் 14-ல் மோடி-ஜெயலலிதா சந்திப்பு. முக்கிய பிரச்சினைகள் ஆலோசிக்கப்படுமா?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஜெயலலிதா வரும் 14ஆம் தேதி டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமருடன் ஜெயலலிதா பேசவுள்ளதாகவும் அதுமட்டுமின்றி மத்திய அரசில் அங்கம் வகிப்பது குறித்த ஆலோசனையிலும் அவர் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின் போது காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைப்பது தொடர்பாகவும், தமிழக மீனவர் பிரச்னை, கச்சத்தீவு மீட்பு விவகாரம் குறித்தும் பிரதமருடன் ஜெயலலிதா ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலின்போது கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கூடுதல் நிதி பெறுவது, அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெறுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் பிரதமரிடம் ஜெயலலிதா முன்வைப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த சந்திப்பை தமிழக மக்களும் அரசியல் விமர்சகர்களும் கூர்ந்து நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.