கல்விக்கடன் ரத்து வாக்குறுதி என்ன ஆச்சு? மாணவர்களை நெருக்கும் வங்கி அதிகாரிகள்
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை அரசே ஏற்கும் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வாக்குறுதிகள் கொடுத்தன. தற்போது அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. திமுகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் நேரம் குறைப்பு, இலவச மின்சாரம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் கல்விக்கடன் ரத்து குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை அங்குலம் அங்குலமாக விமர்சித்து வரும் வரும் திமுக தலைவர் கருணாநிதியும் இதுகுறித்து எவ்வித அழுத்தமும் அரசுக்கு கொடுக்கவில்லை
இந்நிலையில் கல்விக்கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என மாணவர்களை வங்கி நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தங்கள் கல்விக்கடனை அரசே கட்டிவிடும் என்ற நினைப்பில் இருந்த மாணவர்களுக்கு வங்கிகளின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது.
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியபோது, “கல்விக் கடனை திரும்ப வசூலிக்க கடிதம் அனுப்புகிறோம். லோக் அதாலத் மூலம் தீர்வு காண்கிறோம். இதற்கு உடன்படாதவர்களைத்தான் நேரடியாக சந்தித்து பணத்தை திருப்பிக் கட்டுமாறு கூறுகிறோம். இது வழக்கமான நடைமுறை தான். மற்றபடி, தேர்தல் வாக்குறுதிகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசு தரப்பில் கல்விக்கடனை ஏற்பதாக அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்கினால் மாணவர்களிடம் பணத்தை நாங்கள் திருப்பிக் கேட்கமாட்டோம்’ என்று கூறினார்.
தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிட வேண்டும் என்று கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.