முஸ்லீம்கள் இல்லாத இந்தியா உருவாகும் வேளை வந்துவிட்டது. சாத்வி பிராச்சியின் சர்ச்சைக்கருத்து
பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து சிறுபான்மையினர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய தலைவரான சாத்வி பிராச்சி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்வி பிராச்சி ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து கண்டனங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம். தற்போது, முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டிய வேளை வந்து விட்டது என்று கூறினார்.
இந்த கருத்துக்கு மத்திய விவசாயத்துறை இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளை கூறுவது தவறானது. இதை நான் கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சாத்வியின் இந்த கருத்துக்கு பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.