உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளர் யார்? ராஜ்நாத்சிங், வருண்காந்தி பெயர்கள் பரிசீலனை
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போன பாஜக, உபியில் கண்டிப்பாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இப்பொழுது முதலே முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முதல்வர் வேட்பாளரை முதலிலேயே அறிவிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது மேனகா காந்தியின் மகன் வருண்காந்தி ஆகியோர்களில் ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பாலாம் என்றும், ராஜ்நாத் சிங் அவர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறி வருகிறது. இந்த தகவலை முதலில் மறுத்தாலும் பின்னர் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
‘முதல்-மந்திரி வேட்பாளராக நான் அறிவிக்கப்படுவேன் என்று வெளியாகி உள்ள தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானது, ஆதாரமற்றது. அப்படி எந்த ஒரு போட்டியிலும் நான் இல்லை. அதேநேரம் கட்சித்தலைமை எனக்கு எந்த பொறுப்பை வழங்கினாலும் அதை விட்டு விட்டு நான் ஓடமாட்டேன்’ என்று கூறினார்.
இதுகுறித்து உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கருத்து சொல்ல மறுத்து விட்டார். அவர் கூறும்போது, ‘உத்தரபிரதேச தேர்தலை மையப்படுத்தியே அலகாபாத்தில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அத்துடன் மதுரா கலவரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மாநில முதல்-மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வது தேசிய செயற்குழுவின் விவகாரம். இதில் மாநில தலைமைக்கு எந்த வேலையும் இல்லை’ என்று கூறினார்.
முதல்-மந்திரி வேட்பாளர் பட்டியலில் ராஜ்நாத் சிங் பெயர் முன்னணியில் இருக்கிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவராகவும், மத்திய மந்திரியாகவும், கட்சியின் பாராளுமன்றக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அவரை தேர்வு செய்வது குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும்’ என்றார்.